முதல் 100 நாட்களில் என்ன செய்ய வேண்டும்: ஆய்வை துவக்கினார் பிரதமர் மோடி
முதல் 100 நாட்களில் என்ன செய்ய வேண்டும்: ஆய்வை துவக்கினார் பிரதமர் மோடி
முதல் 100 நாட்களில் என்ன செய்ய வேண்டும்: ஆய்வை துவக்கினார் பிரதமர் மோடி
ADDED : ஜூன் 03, 2024 05:42 AM

புதுடில்லி : லோக்சபா தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை நாளை நடக்க உள்ள நிலையில், ஆட்சி பொறுப்பை ஏற்றதும், முதல், 100 நாட்களில் செய்ய வேண்டிய திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று நடத்தினார்.
லோக்சபாவுக்கான தேர்தல்கள் முடிவடைந்து, நாளை ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது. தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகளில், பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டுள்ளன.
லோக்சபா தேர்தலுக்கு முன்பாகவே, அமைச்சர்கள் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, புதிய ஆட்சி அமைந்ததும், முதல் 100 நாட்களில் செய்ய வேண்டிய திட்டங்கள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்யும்படி கூறியிருந்தார். அதுபோல, ஒவ்வொரு துறையின் சார்பில், செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் பட்டியல் தயாரிக்க அறிவுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடி நேற்று ஏழு கூட்டங்களில் பங்கேற்றார். அதில், முதல், 100 நாட்களில் செய்ய வேண்டிய பணிகள் குறித்த ஆய்வு கூட்டமும் அடங்கும். இதைத் தவிர, கோடை வெயில் மற்றும் பருவமழை தொடர்பாகவும் அவர் ஆலோசனை நடத்தினார்.
ராஜ-ஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில், அடுத்த சில நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்று விளக்கப்பட்டது. அதை சமாளிக்கத் தேவையான நடவடிக்கைகள் குறித்து மோடி ஆலோசனை நடத்தினார். கோடை வெயிலால், தீ விபத்துகள் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.
சமீபத்தில், 'ரேமல்' புயலால், கிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாகவும், மீட்புப் பணிகள் குறித்தும் அவர் ஆலோசனை நடத்தினார்.
மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் ஏற்பட்ட தீவிபத்துகள் குறித்தும் ஆய்வு செய்தார். வரும், 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்வது தொடர்பாகவும், அதிகாரிகளுடன், மோடி ஆலோசனை நடத்தினார்.