'மூடா'வில் நுாற்றுக்கணக்கான கோப்புகள் மாயம் வீட்டுமனை முறைகேட்டை மூடிமறைக்க முயற்சி
'மூடா'வில் நுாற்றுக்கணக்கான கோப்புகள் மாயம் வீட்டுமனை முறைகேட்டை மூடிமறைக்க முயற்சி
'மூடா'வில் நுாற்றுக்கணக்கான கோப்புகள் மாயம் வீட்டுமனை முறைகேட்டை மூடிமறைக்க முயற்சி
ADDED : ஜூலை 10, 2024 04:08 AM
பெங்களூரு : மைசூரு நகர வளர்ச்சி ஆணையத்தின், வீட்டுமனை முறைகேட்டில் ஒவ்வொரு விஷயமாக, வெளிச்சத்துக்கு வருகிறது. வீட்டுமனை வழங்கியது தொடர்பாக, நுாற்றுக்கும் மேற்பட்ட கோப்புகள் மாயமானது, சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது.
மூடா எனும் மைசூரு நகர வளர்ச்சி ஆணையம், அரசு மற்றும் தனியார் நிலத்தை கையகப்படுத்தி, வீட்டுமனைகள் அமைத்து விற்பனை செய்கிறது. இது போன்று வீட்டுமனைகள் வழங்கியதில், பெருமளவில் 'கோல்மால்' நடந்திருப்பதாக, தகவல் வெளியானது.
முதல்வர் சித்தராமையா குடும்பத்தினரும், சட்டவிரோதமாக வீட்டுமனை பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் முதல்வர் தர்ம சங்கடத்தில் சிக்கியுள்ளார்.
அண்ணன் பரிசு
இதற்கு விளக்கம் அளித்த முதல்வர், 'வீட்டுமனையை நாங்கள் சட்டவிரோதமாக பெறவில்லை. என் மனைவிக்கு அவரது அண்ணன், பரிசாக அளித்தார்' என கூறினார்.
இதை ஏற்காத எதிர்க்கட்சிகள், முதல்வரின் சொந்த மாவட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது. இதற்கு பொறுப்பேற்று, ராஜினாமா செய்ய வேண்டும் என, நெருக்கடி கொடுக்கின்றனர்.
மூடாவில் நடந்த முறைகேடு குறித்து, போலீசார் விசாரணை நடத்துகின்றனர். கையகப்படுத்தப்பட்ட நிலம், எவ்வளவு வீட்டுமனைகள் விற்கப்பட்டன, யாரிடமிருந்து எப்போது, எவ்வளவு நிலம் விற்கப்பட்டது என்பது குறித்து, ஆய்வு செய்கின்றனர். ஊழியர்களிடம் தகவல் கேட்டறிகின்றனர்.
விசாரணையின்போது, நுாற்றுக்கணக்கான கோப்புகள் மாயமானது தெரிய வந்தது. சில கோப்புகளில் முக்கியமான பக்கங்கள் கிழிக்கப்பட்டுள்ளன. முறைகேட்டை மூடிமறைக்க முயற்சி நடப்பதாக, சந்தேகம் எழுந்துள்ளது.
இதற்கு முன் மூடா மேம்படுத்தும் லே - அவுட்களுக்கு, நிலம் விட்டுக்கொடுத்த விவசாயிகளுக்கு 40 சதவீதம் வீட்டுமனைகள், நிவாரணமாக வழங்கப்பட்டது. பா.ஜ., அரசு வந்த பின், 2020ல் இந்த அளவை 50 சதவீதமாக அதிகரித்தது. இந்த மாற்றம், 2020ம் ஆண்டுக்கு பின், கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு மட்டுமே பொருந்தும்.
கோப்புகள் ஆய்வு
ஆனால், மூடா அதிகாரிகள், 30 - 40 ஆண்டுகளுக்கு முன்பு, நிலம் விட்டு கொடுத்தவர்களுக்கும், இதே விதிமுறையின் படி வீட்டுமனை வழங்கி உள்ளனர்.
ஒரே நாளில் நுாற்றுக்கும் மேற்பட்ட வீட்டுமனைகள் வழங்கியதாக கூறப்படுகிறது. கோப்புகளை ஆய்வு செய்தபோது, இது தெரிய வந்துள்ளது.
செல்வாக்குமிக்க முக்கிய புள்ளிகளுக்கு, பிரபலமான லே - அவுட்களில் வீட்டுமனை வழங்கிஉள்ளனர்.
தற்போது காணாமல் போன கோப்புகளை கண்டுபிடிக்க, போலீசார் முயற்சிக்கின்றனர்.