ஒடிசா புரி ஜெகன்னாதர் கோவில் பொக்கிஷ அறையை திறக்க முடிவு
ஒடிசா புரி ஜெகன்னாதர் கோவில் பொக்கிஷ அறையை திறக்க முடிவு
ஒடிசா புரி ஜெகன்னாதர் கோவில் பொக்கிஷ அறையை திறக்க முடிவு
ADDED : ஜூலை 10, 2024 02:38 AM

புவனேஸ்வர், ஒடிசாவின், புரி ஜெகன்னாதர் கோவில் பொக்கிஷ அறையின் உள்அறையில் உள்ள விலை மதிப்புள்ள பொருட்களை கணக்கெடுக்க நியமிக்கப்பட்ட உயர்மட்டக் கமிட்டி, வரும் 14ல் உள்அறையை திறக்கும்படி மாநில அரசுக்கு பரிந்துரைக்க உள்ளது.
ஒடிசாவில், முதல்வர் மோகன் சரண் மஜி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள புரி ஜெகன்னாதர் கோவிலின் பொக்கிஷ அறையில், விலைமதிப்புள்ள நகைகள் பாதுகாக்கப்படுகின்றன.
சர்ச்சை
அந்த பொக்கிஷ அறையின் உள்அறையில் விலை உயர்ந்த வைர, வைடூரிய ஆபரணங்கள், பழங்கால பொருட்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த அறை, 1978ல் கடைசியாக திறக்கப்பட்டது. அதன் பின் கடந்த 46 ஆண்டுகளாக திறக்கப்படவில்லை.
இதைச்சுற்றி பல்வேறு சர்ச்சைகள் உலா வந்தன. குறிப்பாக, பொக்கிஷ அறையில் சாவி காணாமல் போனதாகவும் புகார் எழுந்தது. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பொக்கிஷ அறையின் உள்அறையை திறக்க நடவடிக்கை எடுப்பதாக பா.ஜ., தேர்தல் வாக்குறுதி அளித்தது.
தற்போது ஆட்சிக்கு வந்ததும், உள் அறையை திறந்து அங்குள்ள விலை உயர்ந்த பொருட்களை கணக்கெடுக்கவும், மராமத்து பணிகளை மேற்பார்வையிடவும் உயர்மட்ட கமிட்டியை மாநில அரசு அமைத்தது.
ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி விஸ்வநாத் ரத் இந்த கமிட்டிக்கு தலைமை வகிக்கிறார். கமிட்டி உறுப்பினர்களின் கூட்டம் சமீபத்தில் நடந்தது.
அப்போது, பொக்கிஷ அறையின் உள் அறையை வரும் 14ல் திறக்க அரசுக்கு பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக விஸ்வநாத் ரத் தெரிவித்தார்.
கணக்கெடுப்பு பணி
உள் அறையின் சாவியை சமர்ப்பிக்கும்படி ஜெகன்னாதர் கோவில் நிர்வாகத்திடம் கேட்கப்பட்டுள்ளது. அந்த சாவியால் உள் அறையை திறக்க முடியாமல் போனால், கதவை உடைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், உள் அறையின் மராமத்து பணிகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை கணக்கெடுக்கும் பணிகளை மேற்கொள்ளும் நடைமுறை குறித்து நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை வகுப்பது குறித்தும் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.