Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ தனுஷ்கோடி அருவி உருவானது எப்படி?

தனுஷ்கோடி அருவி உருவானது எப்படி?

தனுஷ்கோடி அருவி உருவானது எப்படி?

தனுஷ்கோடி அருவி உருவானது எப்படி?

ADDED : ஜூலை 17, 2024 11:26 PM


Google News
Latest Tamil News
கர்நாடகாவின் மைசூரு, அரண்மனை நகர் என, பிரசித்தி பெற்றது. சுற்றுலா பயணியரின் சொர்க்கம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்குள்ள ஒரே நீர் வீழ்ச்சியான தனுஷ்கோடி, சுற்றுலா பயணியரை கவர்ந்து இழுக்கிறது.

மைசூருக்கு வரும் சுற்றுலா பயணியர், அரண்மனை, மிருகக்காட்சி சாலை, சாமுண்டி மலை என, பல்வேறு சுற்றுலா தலங்களை பார்த்த பின், தனுஷ்கோடி நீர் வீழ்ச்சியை காண மறப்பதில்லை.

இது மைசூரின் ஒரே நீர்வீழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. மழைக்காலம் என்பதால், நீர்வீழ்ச்சியில் வெள்ளம் பெருக்கெடுத்து பூலோக சொர்க்கமாக காட்சி அளிக்கிறது.

மைசூரில் மழை


கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கத்தால், நீர் வீழ்ச்சி வறண்டு காணப்பட்டது. நீரில் மறைந்திருந்த பாறைகள் தென்பட்டன. சுற்றுலா பயணியர் ஏமாற்றம் அடைந்தனர். தற்போது மைசூரில் மழை வெளுத்துக் கட்டுவதால், தனுஷ்கோடி நீர் வீழ்ச்சியில் ஆக்ரோஷமாக தண்ணீர் கொட்டுகிறது.

காவிரி ஆற்றில் இருந்து உற்பத்தியான தனுஷ்கோடி நீர் வீழ்ச்சி, தென் மேற்கு பருவ மழைக்காலத்தில் உக்ரமாகவும், வட கிழக்கு பருவமழையில் சாந்த சொரூபியாகவும், கோடைக் காலத்தில் தொய்வடைந்தும் காட்சி அளிக்கும். காலத்துக்கு தக்கபடி தன் வடிவத்தை மாற்றி, சுற்றுலா பயணியரை மகிழ்விக்கும்.

மழைக்காலத்தில் குடகில் மழை ஆர்ப்பரிக்கும் போது, காவிரி ஆறு உக்ரமாக பாயும். அப்போது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் காவிரி, தனுஷ்கோடியில் ஆக்ரோஷமாக பாய்ந்து வரும் காட்சியை கண்டால், கண்களை எடுக்கவே முடியாது. கண்களுக்கு ரம்யமான காட்சியாக இருக்கும்.

மைசூருக்கு புதிதாக வருவோருக்கு, தனுஷ்கோடி நீர் வீழ்ச்சியை பற்றி தெரியாது. எப்படி செல்வது என, தெரிவதில்லை. கே.ஆர்.நகரின், சுஞ்சனகட்டே அருகில் தனுஷ்கோடி உள்ளது.

காவிரி ஆற்றிலிருந்து உற்பத்தியாகும் தனுஷ்கோடி, விசாலமான பாறைகள் இடையே வளைந்து, நெளிந்து வந்து, 400 அடி அகலம், 60 அடி உயரத்தில் இருந்து பாய்கிறது. மழைக்காலத்தில் இதை காணும் போது, உடல் சிலிர்க்கும்.

தனுஷ்கோடி நீர் வீழ்ச்சிக்கும், புராணத்துக்கும் தொடர்புள்ளது. முன்னொரு காலத்தில் இந்த இடம் அடர்ந்த காடு சூழ்ந்த பகுதியாக இருந்தது. இதை தண்டகாரண்யம் என, அழைத்தனர்.

ஒரு முறை திருணபிந்து என்ற மஹரிஷி இங்கு வந்தார். இந்த இடமே தான் தவம் செய்ய தகுதியான இடம் என, முடிவு செய்தார். ஆனால் தவம் செய்வதற்கு நீராட நதி தேவைப்பட்டதால், நதியை தேடி அலைகிறார்.

அதே இடத்தில் ரகசியமாக பாயும் காவிரி ஆறு தென்படவில்லை. எனவே ஸ்ரீமன் நாராயணனை நினைத்து தவம் செய்ய ஆரம்பித்தார். ரிஷியின் தவத்தை மெச்சிய நாராயணன், ரகசியமாக பாய்ந்த காவிரியை காண்பிக்கிறார். தேத்ரா யுகத்தில் ராமனாக அவதரித்து, ராவணனை அழித்து உங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவேன் என, வாக்களிக்கிறார்.

காலப்போக்கில் ராமன், சீதை, லட்சுமணனுடன் வனவாசம் செல்கிறார். சீதையை கவர்ந்து சென்ற ராவணனை, இலங்கையில் வதம் செய்கிறார். அங்கிருந்து திரும்பும் போது, தனுஷ்கோடிக்கு வருகிறார்.

அப்போது ராமன், தன் தம்பி லட்சுமணனிடம், பாறையை பிளக்கும்படி கூறுகிறார். அவரும் அம்பை எய்து பாறையை பிளக்கிறார். அதிலிருந்து காவிரி ஊற்றெடுக்கிறது. லட்சுமணன் அம்பை எய்த இடத்தில் உருவான நீரே, தனுஷ்கோடியானதாக புராணங்கள் கூறுகின்றன. இந்த இடத்திற்கு மற்றொரு சிறப்பும் உள்ளது.

அமைதியாக பாய்கிறது


தனுஷ்கோடி ஆறு, மற்ற இடங்களில் பெரும் சத்தத்துடன் பாய்ந்தாலும், ராமதேவர் கோவில் அருகே, சத்தமே இல்லாமல் அமைதியாக பாய்கிறது.

சுஞ்சனகட்டே கோவிலுக்கு வரும் பக்தர்கள், நீர் வீழ்ச்சியை பார்க்காமல் செல்வதில்லை. சுற்றுலா பயணியரும் பெருமளவில் வருகின்றனர். குறிப்பாக மைசூரின் சுற்றுப்பகுதியில் இருந்து, வார இறுதி நாட்களில் அதிகமானோர், குடும்பத்துடன், நண்பர்களுடன் வருகின்றனர்.

தனுஷ்கோடி நீர்வீழ்ச்சி, எவ்வளவு அழகானதோ, அதே அளவுக்கு அபாயமானதும் கூட. இங்கு நீச்சலடிப்பது, நீரில் இறங்கி விளையாடுவது கூடாது.

இதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணியர், இயற்கை காட்சிகளை ரசித்து, நீர் வீழ்ச்சியை சிறிது தொலைவில் இருந்து பார்த்துவிட்டு, திரும்பி செல்வது நல்லது.

தனுஷ்கோடி அருகிலேயே, ராமசமுத்ரா அணை, சக்கரே கிராமத்தின் அருகில் பள்ளூரு அணைகள் உள்ளன. இங்கும் சுற்றுலா பயணியரை அதிகம் காண முடிகிறது- நமது நிருபர் -.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us