ரேஷன் அரிசி கடத்திய பா.ஜ., பிரமுகர் கைது
ரேஷன் அரிசி கடத்திய பா.ஜ., பிரமுகர் கைது
ரேஷன் அரிசி கடத்திய பா.ஜ., பிரமுகர் கைது
ADDED : ஜூலை 17, 2024 11:25 PM

கலபுரகி: ரேஷன் அரிசி கடத்திய வழக்கில் தலைமறைவாக இருந்த பா.ஜ., பிரமுகர், ஏழு மாதங்களுக்கு பின் கைது செய்யப்பட்டுள்ளார்.
கலபுரகி சித்தாபூரை சேர்ந்தவர் மணிகாந்தா ராத்தோட், 44. பா.ஜ., பிரமுகர்.
இவர், கடந்த ஆண்டு மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலில், கிராம பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் பிரியங்க் கார்கேயை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமைச்சர் பிரியங்க் கார்கே ஆதரவாளர்கள் தன்னை கொல்ல முயன்றதாக கூறி, போலீசில் புகார் செய்தார். விசாரணையில் மணிகாந்தா ராத்தோட் அளித்தது பொய் புகார் என்று தெரிந்தது. அவர் கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் ரேஷன் அரிசியை மஹாராஷ்டிராவுக்கு கடத்திய வழக்கில் ராஜு என்பவரை, யாத்கிர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், ரேஷன் அரிசி கடத்தலில், மணிகாந்தா ராத்தோட்டுக்கும் தொடர்பு இருப்பது தெரிந்தது.
அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர். ஆனால், அவர் தலைமறைவானார். கடந்த ஏழு மாதங்களாக போலீசாரிடம் சிக்காமல் டிமிக்கி கொடுத்தார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மணிகாந்தா ராத்தோட் சித்தாபூர் வந்தார். இது பற்றி கிடைத்த தகவலின் படி, நேற்று முன்தினம் இரவு அவரை போலீசார் கைது செய்தனர்.