Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ பெங்களூரில் கொட்டி தீர்த்த கனமழையால் பரிதவிப்பு மெட்ரோ பாதையில் மரக்கிளை விழுந்ததால் ரயில் நிறுத்தம்

பெங்களூரில் கொட்டி தீர்த்த கனமழையால் பரிதவிப்பு மெட்ரோ பாதையில் மரக்கிளை விழுந்ததால் ரயில் நிறுத்தம்

பெங்களூரில் கொட்டி தீர்த்த கனமழையால் பரிதவிப்பு மெட்ரோ பாதையில் மரக்கிளை விழுந்ததால் ரயில் நிறுத்தம்

பெங்களூரில் கொட்டி தீர்த்த கனமழையால் பரிதவிப்பு மெட்ரோ பாதையில் மரக்கிளை விழுந்ததால் ரயில் நிறுத்தம்

ADDED : ஜூன் 03, 2024 04:56 AM


Google News
Latest Tamil News
பெங்களூரு: பெங்களூரில் நேற்று இரவு கனமழை கொட்டி தீர்த்தது. மெட்ரோ ரயில் பாதை மீது, மரக்கிளை விழுந்ததால் ரயில் சேவை, அரை மணி நேரம் நிறுத்தப்பட்டது.

அரபிக்கடலின் தென்கிழக்கு பகுதியில் நிலவும், மேலடுக்கு சுழற்சி காரணமாக, ஜூன் 1ம் தேதி முதல் நான்கு நாட்கள், கர்நாடகாவில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என்று, வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

இதன்படி பெங்களூரில் நேற்று முன்தினம் இரவு சிவாஜிநகர், ராஜாஜிநகர், பீன்யா, எலஹங்கா, மெஜஸ்டிக், நாகவாரா கனகநகர், ஹெச்.ஏ.எல்., பி.டி.எம்., லே அவுட், கஸ்துாரி நகர் உள்ளிட்ட பகுதியில், இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.

வீடுகளுக்குள் மழைநீர்


கனகநகரில் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளுக்குள், மழைநீருடன் சேர்ந்து சாக்கடை கழிவுநீரும் கலந்தது. இதனால் அந்த வீடுகளில் வசித்த மக்கள், கடும் அவதி அடைந்தனர். இரவு முழுதும் துாங்காமல், வீட்டிற்குள் புகுந்த மழைநீரை, பாத்திரங்களில் பிடித்து வெளியே ஊற்றினர். நேற்று காலை மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து போராட்டம் நடத்தினர். அங்கு சென்ற அதிகாரிகள், மக்களை சமாதானப்படுத்தினர்.

நேற்று முன்தினம் இரவு மழை பெய்தாலும், நேற்று காலை மழை இல்லை. மிதமான வெயில் அடித்தது. ஆனால் நேற்று மாலை 5:30 மணிக்கு மேல், கருமேகங்கள் வானில் சூழ்ந்தன. சிறிது நேரத்தில் மழை பெய்ய ஆரம்பித்தது. கண்ணை பறிக்கும் அளவிற்கு, மின்னல் மின்னியது. இடி சத்தம் பலமாக இருந்தது.

கனமழை


ரிச்மெண்ட் டவுன், சாந்திநகர், எலஹங்கா, ஹெப்பால், எலஹங்கா, இந்திராநகர், டிரினிட்டி, எம்.ஜி.ரோடு, ராஜாஜிநகர், விஜயநகர், பசவேஸ்வராநகர், மைசூரு ரோடு, ஜெயநகர், ராமகிருஷ்ண நகர், மல்லேஸ்வரம், கே.ஆர்.மார்க்கெட், டவுன்ஹால், மாநகராட்சி, சிவானந்தா சதுக்கம், சேஷாத்திரிபுரம், சிவாஜிநகர், கோரமங்களா, யஷ்வந்த்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

இதனால் சாலையில் மழைநீர் வெள்ளம் போல, பெருக்கெடுத்து ஓடியது. நேற்று வார விடுமுறை நாள் என்பதால், சாலைகளில் வாகனங்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தது. வெளியே சென்று இருசக்கர வாகனங்களில் வீட்டிற்கு வந்தவர்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள், ரயில்வே சுரங்கபாதை அடியில் நின்று கொண்டனர். மழை நின்ற பின்னர், வீடுகளுக்கு புறப்பட்டனர். பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்தன. சில இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஜெயநகரில் மரக்கிளை விழுந்ததில், இரண்டு கார்கள் சேதம் அடைந்தன.

சர்வீஸ் பாதிப்பு


செல்லகட்டா - ஒயிட்பீல்டு மெட்ரோ ரயில் பாதையில், எம்.ஜி.ரோடு - டிரினிட்டி மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில், மரக்கிளை முறிந்து, மெட்ரோ ரயில் பாதை மீது விழுந்தது. இதனால் எம்.ஜி.ரோடு - டிரினிட்டி இடையில் மெட்ரோ ரயில் சேவை, அரை மணி நேரம் நிறுத்தப்பட்டது.

அந்த நேரத்தில் இந்திராநகரில் இருந்து ஒயிட்பீல்டு, எம்.ஜி.,ரோட்டில் இருந்து, செல்லகட்டா வரை ரயில்கள் இயக்கப்பட்டன. ரயில் பாதையில் விழுந்த மரக்கிளைகள் அகற்றப்பட்டதும், வழக்கம்போல ரயில்கள் இயங்கின.

பெங்களூரு மட்டுமின்றி பெங்களூரு ரூரல் பகுதிகளான ஆனேக்கல், நெலமங்களாவில் கனமழை பெய்தது. கனமழையால் ஆனேக்கல்லில் உள்ள முத்தலாய மடுவு நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டியது.

2,000 வாழை மரம்


மைசூரு ஹுன்சூர் தாலுகா நாகபுரா, ஹரலஹள்ளி கிராமங்களில் சூறைக்காற்றுடன் பெய்த மழைக்கு 2,000 வாழை மரங்கள் சாய்ந்தன.

இந்நிலையில் மழை எதிரொலியாக தட்சிண கன்னடா, பாகல்கோட், கொப்பால், ராய்ச்சூர், விஜயபுரா, யாத்கிர், சித்ரதுர்கா, ஹாசன், மாண்டியா, மைசூரு, துமகூரு, பெங்களூரு நகரம், பெங்களூரு ரூரல், சிக்கபல்லாப்பூர் ஆகிய 14 மாவட்டங்களுக்கு, இன்று 'மஞ்சள் அலெர்ட்' விடுக்கப்பட்டு உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us