ஓட்டு எண்ணும் மையத்திற்குள் மொபைல் போன்களுக்கு தடை
ஓட்டு எண்ணும் மையத்திற்குள் மொபைல் போன்களுக்கு தடை
ஓட்டு எண்ணும் மையத்திற்குள் மொபைல் போன்களுக்கு தடை
ADDED : ஜூன் 03, 2024 04:57 AM

பெங்களூரு: ''ஓட்டு எண்ணும் மையத்தில் உள்ள ஊழியர்கள், ஏஜென்டுகள் யாரும் மொபைல் போன் கொண்டுவர அனுமதியில்லை. ஓட்டு எண்ணும் மையத்திற்கு வரும் வரை, எந்த மேஜையில் உட்கார போகிறோம் என்பது நியமிக்கப்பட்ட ஊழியர்களுக்கே தெரியாது,'' என பெங்களூரு மாநகராட்சி கமிஷனரும், தேர்தல் அதிகாரியுமான துஷார் கிரிநாத் தெரிவித்தார்.
லோக்சபா தேர்தலில், பெங்களூரின் மூன்று தொகுதிகளுக்கு உட்பட்ட மின்னணு ஓட்டு இயந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள பாதுகாப்பு அறைகளை, நேற்று துஷார் கிரிநாத் பார்வையிட்டார்.
பின், அவர் அளித்த பேட்டி:
பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்டு பெங்களூரு சென்ட்ரல், பெங்களூரு வடக்கு, பெங்களூரு தெற்கு ஆகிய மூன்று லோக்சபா தொகுதிகள் உள்ளன. இம்மூன்று தொகுதிக்கு உட்பட்ட மூன்று சட்டசபை தொகுதிகள், பெங்களூரு ரூரல், சிக்கபல்லாபூர் லோக்சபா தொகுதிக்குள் வருகிறது.
ஒரு அறையில் நான்கு மேஜைகள் இருக்கும். ஒவ்வொரு மேஜைக்கும், மூன்று ஓட்டு எண்ணும் பணியாளர்கள், மைக்ரோ பணியாளர்கள், மேற்பார்வையாளர், ஓட்டு எண்ணும் உதவியாளர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
ஓட்டு எண்ணும் ஊழியர்கள், வேட்பாளர்களின் ஏஜென்டுகள், காலை 6:00 மணிக்கு சம்பந்தப்பட்ட ஓட்டு எண்ணும் இடத்துக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 7:45 மணிக்கு பாதுகாப்பு அறை திறக்கப்படும். 8:00 மணிக்கு முதலில் தபால் ஒட்டுகளும்; அதன் பின், மின்னணு இயந்திர ஓட்டுகளும் எண்ணப்படும்.
அடையாள அட்டை வைத்திருப்போர் மட்டுமே வர அனுமதிக்கப்படுவர். இம்முறை அனைத்து அறைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. தலைமை தேர்தல் அதிகாரியின் உத்தரவின்படி, மற்ற இடங்களில் கண்காணிப்பு கேமரா, வீடியோ பதிவு போன்ற அமைப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஓட்டு எண்ணும் மையத்தில் பார்வையாளர்களுக்கான அறை, தேர்தல் நடத்தும் அலுவலர் அறை, ஊடகத்தினருக்கு ஊடக மையம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. ஊடகவியலாளர்கள், ஊடக மையத்தில் மொபைல் போன் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவர். ஓட்டு எண்ணும் இடத்தில் மொபைல் போன் பயன்படுத்த அனுமதி இல்லை.
ஓட்டு எண்ணும் மையத்தில் உள்ள ஊழியர்கள், ஏஜென்டுகள் யாரும் மொபைல் போன் கொண்டுவர அனுமதியில்லை. ஓட்டு எண்ணும் மையத்திற்கு வரும் வரை, எந்த மேஜையில் உட்கார போகிறோம் என்பது நியமிக்கப்பட்ட ஊழியர்களுக்கே தெரியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
எண்ணிக்கை எங்கே?
தேர்தல் அதிகாரி துஷார் கிரிநாத் கூறுகையில், ''பெங்களூரு சென்ட்ரல் தொகுதியின் ஓட்டுகள் வசந்த் நகர் அரண்மனை சாலையில் உள்ள மவுண்ட் கார்மல் கல்லுாரியிலும்; பெங்களூரு வடக்கு தொகுதியின் ஓட்டுகள், மல்லையா சாலையில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லுாரியிலும்; பெங்களூரு தெற்கு தொகுதியின் ஓட்டுகள் ஜெயநகர் ஒன்பதாவது பிளாக், எஸ்.எஸ்.எம்.ஆர்.வி., கல்லுாரியிலும் எண்ணப்படும்,'' என்றார்.
� பெங்களூரு தெற்கு தொகுதிக்குட்பட்ட பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ள, மின்னணு ஓட்டு இயந்திரங்களை, தேர்தல் அதிகாரி துஷார் கிரிநாத் பார்வையிட்டார். � துப்பாக்கி ஏந்திய பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு அதிகாரி. இடம்: எஸ்.எஸ்.எம்.ஆர்.வி., கல்லுாரி, ஜெயநகர்.