மும்பையை புரட்டி போட்ட கனமழை ரயில், விமான சேவைகள் பாதிப்பு
மும்பையை புரட்டி போட்ட கனமழை ரயில், விமான சேவைகள் பாதிப்பு
மும்பையை புரட்டி போட்ட கனமழை ரயில், விமான சேவைகள் பாதிப்பு
ADDED : ஜூலை 09, 2024 01:34 AM

மும்பை, மஹாராஷ்டிராவின் மும்பையில் இடைவிடாமல் கொட்டிய மழையால், நகரின் முக்கிய பகுதிகள் நீரில் மூழ்கின; ரயில் மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டு, இயல்பு வாழ்க்கை முடங்கியது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து, மஹாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
மும்பை, தானே உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரு நாட்களாக சாரல் மழை பெய்த நிலையில், நேற்று முன்தினம் இரவு சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.
வெள்ளக்காடானது
நள்ளிரவு துவங்கிய கனமழை, விடிய விடிய இடைவிடாமல் கொட்டியதால், மும்பை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
ஆறு மணி நேரத்தில், 30 செ.மீ., மழை பெய்ததால், நகரின் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. அந்தேரி, குர்லா, தானே, பாந்த்ரூப், கிங்ஸ் சர்க்கிள், தாதர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது.
கால்வாய்கள் நிரம்பியதை அடுத்து, நகரில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது.
இதனால், மும்பையின் பல இடங்களில் பஸ் சேவை முடங்கியது. புறநகர் ரயில் நிலையங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால், மின்சார ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
கல்யான் - கசாரா இடையே இருப்புப் பாதையில் மரம் முறிந்து விழுந்ததால், டிட்வாலா மற்றும் கசாரா இடையே ரயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகளில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ஒரு சில இடங்களில் நிலைமை சரி செய்யப்பட்டதை அடுத்து, ரயில்கள் படிப்படியாக இயக்கப்பட்டு வருகின்றன.
விமான நிலைய ஓடுபாதையில் மழை நீர் தேங்கியதை அடுத்து, விமான சேவை பாதிக்கப்பட்டது. வெளி மாநிலங்களில் இருந்து வந்த விமானங்கள், ஆமதாபாத், ஹைதராபாத், இந்துார் உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டன.
விடுமுறை
சூறைக்காற்றுடன் பெய்த மழையால், 50க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. பள்ளி, கல்லுாரிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது.
தானேவின் கனமழை மற்றும் வெள்ளத்தில் பாலம் ஒன்று அடித்துச் செல்லப்பட்டது.
குடியிருப்பு பகுதிகளில் சிக்கியவர்களை, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் மீட்டனர்.
அங்கு, 200க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன; 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. ராய்காட் மலைக்கோட்டையில் சிக்கிய சுற்றுலா பயணியர் மற்றும் மலையேற்றத்துக்கு வந்தவர்களை பேரிடர் குழுவினர் மீட்டனர்.
மழை காரணமாக பல உறுப்பினர்கள் வராததால், மஹாராஷ்டிராவில் சட்டசபை, மேல்சபை ஒத்தி வைக்கப்பட்டன.
மழை நிலவரம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, பிரஹன்மும்பை மாநகராட்சியின் பேரிடர் துறை கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டு, நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.
அவர் கூறுகையில், ''மக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியேற வேண்டாம். கடற்கரைக்கு அருகில் யாரையும் அனுமதிக்க வேண்டாம் என்று போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.