பா.ஜ., - எம்.பி.,க்கு நடந்த பாராட்டு விழா இலவச மது வழங்கியதால் எகிறிய கூட்டம்
பா.ஜ., - எம்.பி.,க்கு நடந்த பாராட்டு விழா இலவச மது வழங்கியதால் எகிறிய கூட்டம்
பா.ஜ., - எம்.பி.,க்கு நடந்த பாராட்டு விழா இலவச மது வழங்கியதால் எகிறிய கூட்டம்
ADDED : ஜூலை 09, 2024 01:33 AM

நெலமங்களா, கர்நாடகாவில் லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ., - எம்.பி., சுதாகருக்கு நடந்த பாராட்டு விழாவில், தொண்டர்களுக்கு மதுபானம் வழங்கப்பட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில் இங்குள்ள சிக்கபல்லாபூர் தொகுதி பா.ஜ., வேட்பாளர் சுதாகர், 1.50 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அவருக்கு பாராட்டு விழா நடத்த, மாவட்ட பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சியான ம.ஜ.த.,வினர் முடிவு செய்தனர்.
பெங்களூரு புறநகர் பகுதியான நெலமங்களாவின் பாவிகெரே என்ற இடத்தில், நேற்று முன்தினம் பாராட்டு விழா நடந்தது.
இதில், 10,000க்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிந்த பின், தொண்டர்களுக்கு அசைவ உணவு, மதுபானம் வழங்க தனித்தனி கவுன்டர்கள் திறக்கப்பட்டிருந்தன.
கவுன்டர்களில் 180 மி.லி., 'டெட்ரா பேக்' மதுபானங்கள் மற்றும் பீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன. இவற்றை பெற, கட்சி தொண்டர்கள் மத்தியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அங்கிருந்த போலீசார் சமாளிக்க முடியாமல் திணறினர். நெரிசலை சமாளிக்க, 'பவுன்சர்'களும் நியமிக்கப்பட்டிருந்தனர்.மதுபானம் வாங்கியவர்கள், பாராட்டு விழா நடந்த பகுதியிலேயே அமர்ந்து குடித்தனர்.
இந்த வீடியோக்கள், சமூக வலைதளங்களிலும், ஊடகத்திலும் வெளியாகின. இது, மாநில அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்க்கட்சியினர் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
காங்., கட்சியை சேர்ந்த, துணை முதல்வர் சிவகுமார் கூறுகையில், “உள்ளூர் பா.ஜ., தலைவர்களின் இதுபோன்ற கலாசாரத்துக்கு, அக்கட்சியின் தேசிய தலைவர் நட்டா, பதில் சொல்ல வேண்டும்,” என்றார்.
பா.ஜ., - எம்.பி., சுதாகர் அளித்த பேட்டி:
நான் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யவில்லை. பா.ஜ., - ம.ஜ.த.,வினர் தான் ஏற்பாடு செய்து, என்னை அழைத்தனர். நானும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக்கும் பங்கேற்று திரும்பினோம். அதன்பின்னரே, மது வினியோகம் செய்யப்பட்டு உள்ளது.
இவ்விஷயத்தை, ஊடகங்கள் வாயிலாக தான் தெரிந்து கொண்டேன். யார் மது வினியோகித்தது என்று தெரியவில்லை. தலைவர்களை அழைத்து, இதுபோன்று செய்திருக்க கூடாது என்று அறிவுறுத்தி உள்ளேன். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் கவனமாக இருப்போம்.
பொது இடங்களில் மது வினியோகிப்பது மன்னிக்க முடியாத குற்றம். என், 20 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில், ஒருபோதும் மது வினியோகித்ததில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.