பணமின்றி தவிக்கும் அரசு: பா.ஜ., விஸ்வநாத் குற்றச்சாட்டு
பணமின்றி தவிக்கும் அரசு: பா.ஜ., விஸ்வநாத் குற்றச்சாட்டு
பணமின்றி தவிக்கும் அரசு: பா.ஜ., விஸ்வநாத் குற்றச்சாட்டு
ADDED : ஜூன் 21, 2024 05:55 AM

மைசூரு: ''வாக்குறுதி திட்டங்களுக்கு பணம் திரட்ட காங்கிரஸ் அரசு பரிதவிக்கிறது. முதல்வரின் தவறான முடிவுகளே சூழ்நிலைக்கு காரணம்,'' என பா.ஜ., - எம்.எல்.சி., விஸ்வநாத் குற்றம் சாட்டினார்.
மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
வாக்குறுதி திட்டங்களை செயல்படுத்த, பணம் இல்லாமல் மாநில காங்கிரஸ் திண்டாடுகிறது.
காலி பணியிடங்களை நிரப்பவில்லை. துறைகளில் நிதி தவறாக பயன்படுகிறது; வளர்ச்சிக்காக 30 சதவீதம் நிதி மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
மாநிலத்தின் தற்போதைய நிலைக்கு, முதல்வர் சித்தராமையாவின் தவறான பொருளாதார கொள்கைகளே காரணம். மாநிலம் திவால் ஆகிறது. பொருளாதாரம் சீர் குலைந்துள்ளது. பட்ஜெட்டில் 50 சதவீதம் தொகையை, வளர்ச்சி திட்டங்களுக்கு ஒதுக்க வேண்டும். ஆனால் 30 சதவீதம் ஒதுக்குகின்றனர்.
வாக்குறுதி திட்டங்களில், சில திட்டங்கள் அவசியமே இல்லை. இந்த திட்டங்களுக்கு பதில், எங்கெங்கு பிரச்னை உள்ளதோ, அந்த பிரச்னைகளுக்கு தீர்வு கண்டிருக்கலாம். கல்வி மற்றும் சுகாதாரத் துறைக்கு முக்கியத்துவம் அளித்திருக்க வேண்டும்.
சிறார்களுக்கு ஒன்று முதல் பிளஸ் 2 வரை இலவச கல்வி அளிக்கும் திட்டத்தை செயல்படுத்தி இருக்கலாம். பெற்றோர் தங்களின் பிள்ளைகளுக்கு லட்சக்கணக்கான ரூபாய் செலவிட்டு, தனியார் பள்ளியில் சேர்த்து விட்டு அவதிப்படுகின்றனர். இலவச கல்வி அளித்தால், பெற்றோருக்கு உதவியாக இருந்திருக்கும்.
வாக்குறுதி திட்டங்களை செயல்படுத்த 65,000 கோடி ரூபாய் செலவிட்டு, மாவட்டத்துக்கு ஒரு பொறுப்பாளர் நியமித்து பணத்தை வீணாக்குவது சரியல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.