காங்., - எம்.எல்.ஏ., பிரதீப்புக்கு எதிராக அணி சேரும் தலைவர்கள்
காங்., - எம்.எல்.ஏ., பிரதீப்புக்கு எதிராக அணி சேரும் தலைவர்கள்
காங்., - எம்.எல்.ஏ., பிரதீப்புக்கு எதிராக அணி சேரும் தலைவர்கள்
ADDED : ஜூன் 21, 2024 05:56 AM

சிக்கபல்லாபூர்: லோக்சபா தேர்தல் முடிந்த பின்னர், சிக்கபல்லாபூர் காங்கிரசில் கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளது. சிக்கபல்லாபூர் எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வருக்கு எதிராக, மூத்த தலைவர்கள் செயல்பட ஆரம்பித்துள்ளனர்.
சிக்கபல்லாபூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், சிக்கபல்லாபூர் பா.ஜ., வேட்பாளர் சுதாகருக்கு எதிராக தீவிர பிரசாரம் செய்தார்.
சிக்கபல்லாபூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை விட, சுதாகர் கூடுதலாக ஒரு ஓட்டு வாங்கினாலும், எம்.எல். ஏ., பதவியை ராஜினாமா செய்வதாக கூறியிருந்தார். ஆனால், சுதாகர் கூடுதல் ஓட்டுகள் வாங்கி அவர் முகத்தில் கரியை பூசினார்.
குற்றச்சாட்டு
சிக்கபல்லாபூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் தோற்று போனதற்கு, பிரதீப் ஈஸ்வர் தான் காரணம் என, சிக்கபல்லாபூர் மாவட்ட முன்னாள் தலைவர் நந்தி அஞ்சனப்பா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் குற்றம் சாட்டினர்.
இதற்கு எம்.எல்.ஏ., ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால், சிக்கபல்லாபூர் காங்கிரசில் கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அடுத்த சட்டசபை தேர்தலில், சிக்கபல்லாபூர் தொகுதியில் பிரதீப் ஈஸ்வருக்கு பதிலாக, லோக்சபா தேர்தலில் தோற்ற ரக் ஷா ராமையாவுக்கு, சீட் கொடுக்க வேண்டும் என்று இப்போது இருந்தே, பிரதீப் ஈஸ்வர் எதிர்ப்பாளர்கள் கோரி வருகின்றனர்.
பிரதீப் ஈஸ்வர் எம்.எல்.ஏ., ஆனதும் மூத்த தலைவர்கள் சிலர், சில பொறுப்புகளை கையாள முயன்றனர். ஆனால் அவர் விடவில்லை.
மூத்த தலைவர்கள் சிலர் தங்களுக்கு வேண்டிய வேலையை செய்யும்படி, எம்.எல்.ஏ.,வுக்கு நெருக்கடி கொடுத்தனர். ஆனால் அவர் கண்டு கொள்ளவில்லை. இதனால் பிரதீப் ஈஸ்வருக்கு எதிராக செயல்பட துவங்கி உள்ளனர்.
பழி சுமத்த திட்டம்
'சிக்கபல்லாபூரில் பா.ஜ., வேட்பாளர் முன்னிலை பெற்றதற்கு, எம்.எல்.ஏ., மீது பழி சுமத்த பார்க்கின்றனர். ம.ஜ.த., ஓட்டுகளும் கிடைத்ததால் பா.ஜ., சுதாகர் முன்னிலை பெற்றார். லோக்சபா தேர்தலின் போது காங்கிரஸ் தலைவர்கள், யாரை சந்தித்தனர் என்று விரைவில் தெரியும்' என, பிரதீப் ஈஸ்வர் ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.