பெட்ரோல், - டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு சைக்கிள் பேரணி நடத்தி பா.ஜ., போராட்டம்
பெட்ரோல், - டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு சைக்கிள் பேரணி நடத்தி பா.ஜ., போராட்டம்
பெட்ரோல், - டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு சைக்கிள் பேரணி நடத்தி பா.ஜ., போராட்டம்
ADDED : ஜூன் 21, 2024 05:54 AM

பெங்களூரு: பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், முதல்வர் சித்தராமையா பதவி விலக கோரியும், விதான் சவுதாவை முற்றுகையிட சைக்கிளில் சென்ற, விஜயேந்திரா உட்பட பா.ஜ.,வினர் கைது செய்யப்பட்டனர்.
கர்நாடக அரசு பெட்ரோல் விலையில் விற்பனை வரியை லிட்டருக்கு மூன்று ரூபாயும், டீசல் விலையில் லிட்டருக்கு 3.50 ரூபாயாகவும் உயர்த்தி உள்ளது. இதனால் அரசுக்கு எதிராக பொதுமக்கள், எதிர்க்கட்சிகள் வெகுண்டு எழுந்துள்ளன.
வாக்குறுதி திட்டங்களை நிறைவேற்ற பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியதாக, தொழில் துறை அமைச்சர் எம்.பி., பாட்டீல் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
* அரசுக்கு அழுத்தம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என அரசுக்கு, எதிர்கட்சிகள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற கோரியும், முதல்வர் சித்தராமையா பதவி விலக வலியுறுத்தியும், மாநிலம் தழுவிய போராட்டத்திற்கு பா.ஜ., அழைப்பு விடுத்திருந்தது.
அதன்படி நேற்று பெங்களூரு, மைசூரு, கோலார், மாண்டியா, ஹாசன் உட்பட மாநிலம் முழுதும் பா.ஜ.,வினர், அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள பா. ஜ., அலுவலகத்திலிருந்து விதான் சவுதாவை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த, பா.ஜ., மாநில தலைவர் விஜயேந்திரா தலைமையில் பா.ஜ., தலைவர்கள், தொண்டர்கள் சைக்கிளில் பேரணியாக சென்றனர்.
அவர்களை பாதி வழியிலேயே போலீசார் தடுத்து நிறுத்தினார். இதனால் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து விஜயேந்திரா, மாநில தலைமை செய்தி தொடர்பாளர் அஸ்வத் நாராயணா, எம்.எல்.சி., ரவி உள்ளிட்ட தலைவர்கள், தொண்டர்களை போலீசார் கைது செய்து, குண்டு கட்டாக துாக்கிச் சென்று வேன்களில் ஏற்றி சென்றனர். சிறிது நேரத்தில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இதன்பின் விஜயேந்திரா அளித்த பேட்டி:
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று, சைக்கிள் பேரணி மூலம் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம். கர்நாடகா மாநிலம் சிக்கலில் உள்ளது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்னர் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அரசு எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளும், மாநில மக்களுக்கு எதிராக உள்ளது. இது மன்னிக்க முடியாத குற்றம்.
பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு இருப்பதால், மாநில அரசு மீது மக்கள் சாபம் விடுகின்றனர். பஸ், குடிநீர் கட்டணமும் உயர்த்தப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது.
சாலையை மறித்து போராட்டம் நடத்தினால், தடியடி நடத்தப்படும் என்று, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறியிருப்பது முட்டாள்தனத்தில் உச்சம்.
தடியடிக்கு பயந்து பா.ஜ.,வினர் பின்வாங்கும் நபர்கள் இல்லை. எத்தனை தடியடி நடத்தினாலும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் வரை, அரசுக்கு எதிராக எங்கள் போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
'உடலுக்கு நல்லது'
'எக்ஸ்' சமூக வலைதளத்தில் தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் குறிப்பிட்டு உள்ளதாவது:
நரேந்திர மோடி பிரதமரான போது, பா.ஜ., அரசு பெட்ரோல், டீசல் விலையை, காஸ் சிலிண்டர் விலை உயர்த்தினார். அப்போது கர்நாடக பா.ஜ., தலைவர்கள், ஏன் போராட்டம் நடத்தவில்லை.
கர்நாடகாவில் 25 பா.ஜ., - எம்.பி.,க்கள் இருந்தனர். இவர்கள் லோக்சபாவில் வாய் திறக்கவில்லை. இப்போது மாநில அரசு மூன்று ரூபாய் விலை உயர்த்தியதை கண்டித்து, பா.ஜ.,வினர் போராட்டம் நடத்துகின்றனர். கர்நாடக அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய பின்னரும், மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டால், கர்நாடகாவில் விலை குறைவாகவே உள்ளது.
தற்போது பா.ஜ.,வினர், பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து, சைக்கிள் பேரணி நடத்துகின்றனர். சைக்கிள் மிதிப்பது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது.
இவ்வாறு குறிப்பிட்டு உள்ளார்.