Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ வலிமை, திறனை பிரதிபலித்த 'தென்னிந்திய திருவிழா' கவர்னர் தாவர்சந்த் கெலாட் பெருமிதம்

வலிமை, திறனை பிரதிபலித்த 'தென்னிந்திய திருவிழா' கவர்னர் தாவர்சந்த் கெலாட் பெருமிதம்

வலிமை, திறனை பிரதிபலித்த 'தென்னிந்திய திருவிழா' கவர்னர் தாவர்சந்த் கெலாட் பெருமிதம்

வலிமை, திறனை பிரதிபலித்த 'தென்னிந்திய திருவிழா' கவர்னர் தாவர்சந்த் கெலாட் பெருமிதம்

ADDED : ஜூன் 17, 2024 04:21 AM


Google News
Latest Tamil News
பெங்களூரு, : ''தென்னிந்திய திருவிழா, இந்தியாவின் வலிமை, திறனை பிரதிபலித்தது. நமது பொருளாதாரத்திற்கு சுற்றுலா துறை முக்கியமானது,'' என, கவர்னர் தாவர்சந்த் கெலாட் தெரிவித்தார்.

கர்நாடகாவில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், எப்.கே.சி.சி.ஐ., எனும் கர்நாடக வர்த்தக மற்றும் தொழில் துறை கூட்டமைப்பு மற்றும் கர்நாடக சுற்றுலா துறை இணைந்து, பெங்களூரு அரண்மனை மைதானத்தில், 'தென்னிந்திய திருவிழா -- 2024'ஐ இரண்டு நாட்கள் நடத்தியது.

நிறைவு நாளான நேற்று பங்கேற்ற கவர்னர் தாவர்சந்த் கெலாட் பேசியதாவது:

உலக பாரம்பரிய சுற்றுலா தலங்கள் கர்நாடகாவில் உள்ளன. வரலாறு மற்றும் மத முக்கியத்துவம் வாய்ந்த ஹம்பி, உடுப்பியின் ஸ்ரீ கிருஷ்ணர் மடம் புகழ் பெற்றவை. மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 15 சதவீதத்துக்கும் அதிகமான பங்களிப்பை கர்நாடகா வழங்குகிறது. இதன் மூலம் கணிசமான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன.

தென் மாநிலங்களில் பழங்கால கோவில்கள், நவீன நகரங்கள், கம்பீரமான மலை தொடர்கள், அமைதியான கடற்கரைகள் என ஏராளமான இடங்கள் உள்ளன.

'கடவுளின் தேசம்' என்று அழைக்கப்படும் கேரளா, 'உப்பங்கழிக்கு' (பேக் வாட்டர்ஸ்) பெயர் பெற்றது. தமிழகத்தின் காஞ்சிபுரம், திருச்சி, மதுரை மீனாட்சி கோவில்கள்; தெலுங்கானாவில் ஹைதராபாத் அரண்மனைகள், சார்மினார் ஆகியவையும், பசுமை வாய்ந்த மூணாறு, ஊட்டி, குடகு போன்ற தலங்கள் சுற்றுலா பயணியரை ஈர்க்கின்றன.

சுற்றுலா முதலீடுகளை ஈர்ப்பதில், தென் மாநிலங்களுக்கு அபரிமிதமான ஆற்றல் உள்ளது. இவ்விஷயத்தில் கர்நாடகா அரசின் சுற்றுலா துறை, எப்.கே.சி.சி.ஐ.,யின் பங்கு பாராட்டத்தக்கது. நமது பொருளாதாரத்திற்கு சுற்றுலா துறை முக்கியமானது. இத்திருவிழா, மத்திய அரசின் வலிமை, திறனை பிரதிபலிக்கிறது. நமது கலாசாரம், மரபுகளை பாதுகாக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

தென்மாநில சுற்றுலா துறைக்கு

ரூ.4,200 கோடி முதலீடு வருகை

சுற்றுலாத்துறை இயக்குனர் ராம்பிரசாத் மனோகர் பேசியதாவது:

தென் மாநிலங்களில் சுற்றுலா துறையின் வளர்ச்சிக்கு, ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. 'தென்னிந்திய திருவிழா 2024'ல் முதலீட்டை ஊக்குவிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் மூலம், 4,200 கோடி ரூபாய் முதலீடு வந்துள்ளது.

இம்மாநிலங்களின் வரலாறு, பாரம்பரியம், நினைவு சின்னங்கள் குறித்து அறிய வாய்ப்பு கிடைத்தது. வேலை வாய்ப்புகள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. வரும் நாட்களில் தென்னிந்தியாவின் ஏழு மாநிலங்கள், உலக சுற்றுலா வரைபடத்தில் முக்கிய இடம் பிடிக்கும் வகையில் இணைந்து செயல்படுவோம்.

சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்த, இதை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இம்மாநிலங்களின் கடலோரம், மலை வாசஸ்தலம், பாரம்பரியம், வன விலங்கு, சுற்றுச்சூழல், வேளாண் சுற்றுலா போன்றவற்றை மேம்படுத்தும் திறன் உள்ளது. இதன் மூலம் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்க முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கர்நாடக வர்த்தக மற்றும் தொழில் துறை கூட்டமைப்பு மற்றும் கர்நாடக சுற்றுலா துறை இணைந்து நடத்திய 'தென்னிந்திய திருவிழா - 2024' நிறைவு நாளில், கவர்னர் தாவர்சந்த் கெலாட்டுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. உடன், கர்நாடக சுற்றுலா துறை இயக்குனர் ராம்பிரசாத் மனோகர், எப்.கே.சி.சி.ஐ., தலைவர் ரமேஷ் சந்திர லொஹட்டி. இடம்: அரண்மனை மைதானம், பெங்களூரு.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us