பார்வதியின் அவதாரமாக நிமிஷாம்பா தேவி காவிரி கரையோரம் இருக்கும் புனித ஸ்தலம்
பார்வதியின் அவதாரமாக நிமிஷாம்பா தேவி காவிரி கரையோரம் இருக்கும் புனித ஸ்தலம்
பார்வதியின் அவதாரமாக நிமிஷாம்பா தேவி காவிரி கரையோரம் இருக்கும் புனித ஸ்தலம்
ADDED : ஜூலை 29, 2024 08:33 PM

பெங்களூரில் இருந்து மைசூரு செல்லும் வழியில் உள்ள மாண்டியா மாவட்டம், ஸ்ரீரங்கப்பட்டணாவில் ஸ்ரீநிமிஷாம்பா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில், பெங்களூரில் இருந்து, 125 கி.மீ., தொலைவிலும், மைசூரில் இருந்து 22 கி.மீ., தொலைவிலும் உள்ளது.
பார்வதி தேவியின் மறு அவதாரமாக நிமிஷாம்பா திகழ்கிறார். பாய்ந்தோடும் காவிரி கரையோரம் அமைந்துள்ள இக்கோவில், வரலாற்று சிறப்புமிக்கது.இங்கு வந்து வழிபடும் பக்தர்களின் பிரச்னைகளை தீர்த்துவைக்கும் தாயாக விளங்குகிறார்.
மன்னிப்பின் உருவம்
ஸ்ரீரங்கப்பட்டணாவின் சக்தி தேவியாகவும், குறிப்பாக மன்னிப்பின் உருவமாகவும் நம்பப்படுகிறது. 300 ஆண்டுகளுக்கு முன்பு, மும்முடி கிருஷ்ணராஜ உடையார் காலத்தில் கட்டப்பட்ட பழமையான கோவில். திருமணமாகாமல் இருப்போர் இங்கு வந்து வழிபடுகின்றனர். மிகவும் நேர்த்தியான கட்டட கலையில் கோவில் உள்ளது. நுழைவு வாயிலின் இருபுறமும் சரஸ்வதி மற்றும் லட்சுமி விக்ரஹங்களை காணலாம்.
நிமிஷாம்பா தேவி நடுநாயகமாக உள்ளார். சிவன், அனுமன், விநாயகர், நாராயணன் போன்ற ஹிந்து கடவுள்களின் விக்ரஹங்களை தரிசனம் செய்யலாம்.
சக்தி ஊடுருவல்
கோவிலை சுற்றி வரும்போது, நிமிஷாம்பா தேவியின் ஒரு விதமான சக்தி, நம்முள் ஊடுருவதை உணரலாம் என்று பக்தர்கள் நம்புகின்றனர். தற்போது, கர்நாடக ஹிந்து அறநிலைய துறை நிர்வகிப்பின் கீழ், கோவில் உள்ளது.
வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடக்கும். குறிப்பாக தசரா விழாவின்போது 10 நாட்களும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.
கன்னட வைசாக மாதம் சுத்த தசமி நாளன்று, 108 கலச பூஜை சிறப்பான முறையில் நடத்தப்படுகிறது.
சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்குவதால், தினமும் ஏராளமான பக்தர்கள் வருவதுண்டு. இங்கு வரும் பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடிய பின், தேவியை தரிசனம் செய்வது வழக்கமாக கொண்டுள்ளனர்.
தற்போது காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், புனித நீராடுவதற்கு அனுமதி இல்லை.
கோவிலில் உள்ள மணியை அர்ச்சகர் அடிக்கும்போது, காகங்கள் வந்து பிரசாதத்தை சாப்பிடும் என்று நம்பப்படுகிறது.
தினமும் காலை 6:30 முதல், இரவு 8:30 மணி வரை கோவில் நடைதிறந்திருக்கும். பண்டிகை நாட்களில் அதிகாலை முதல் இரவு வரை திறந்திருக்கும்.
- நமது நிருபர் -