ஆண்களுக்கு இலவச பஸ் பயணம் பா.ஜ., - எம்.எல்.ஏ., விருப்பம்
ஆண்களுக்கு இலவச பஸ் பயணம் பா.ஜ., - எம்.எல்.ஏ., விருப்பம்
ஆண்களுக்கு இலவச பஸ் பயணம் பா.ஜ., - எம்.எல்.ஏ., விருப்பம்
ADDED : ஜூன் 24, 2024 04:51 AM

விஜயபுரா : ''வாக்குறுதி திட்டங்கள் முறையாக வழங்கப்படவில்லை. சக்தி திட்டத்தால் பெண்கள் மட்டுமே பயனடைகின்றனர். பி.பி.எல்., கார்டு உள்ள ஆண்களுக்கும் இலவச பஸ் பயண வசதி செய்து தர வேண்டும்,'' என பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் தெரிவித்தார்.
விஜயபுராவில் அவர் அளித்த பேட்டி:
வாக்குறுதி திட்டத்தை செயல்படுத்தியதால், அரசின் கருவூலம் காலியாக உள்ளது. இப்போது திட்டத்தை பாதியில் நிறுத்தினால், அது காங்கிரஸ் அரசுக்கு ஆபத்தாக முடியும்.
வாக்குறுதி திட்டங்கள் முறையாக வழங்கவில்லை. சக்தி திட்டத்தால் பெண்கள் மட்டுமே பயன் அடைகின்றனர். பி.பி.எல்., கார்டு உள்ள ஆண்களுக்கும், இலவச பஸ் பயண வசதி செய்து தர வேண்டும்.
பகல் கொள்ளை
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசு, பகல் கொள்ளையில் ஈடுபட்டு வருகிறது. அனைத்து துறைகளிலும் ஊழல், நில மோசடி நடக்கிறது.
வருவாய் துறை அமைச்சரின் தொகுதியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம், போலி ஆவணங்கள் மூலம் வேறு ஒருவருக்கு வழங்கப்பட்டு உள்ளது. இதில் இரண்டு அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக லோக் ஆயுக்தாவுக்கு கடிதம் எழுதி உள்ளேன். போலி ஆவணங்கள் மூலம் நிலம் கையகப்படுத்தியது குறித்து விசாரணை நடத்த வேண்டும்.
அரசியல் சட்டத்தை மாற்ற மாட்டோம். சந்திரன் மாறும் வரை சூரியன் மாறாது. நாங்கள் ஆட்சிக்கு வந்திருப்பது சட்டத்தை மாற்றுவதற்கு அல்ல. அம்பேத்கரின் வழிகாட்டுதலின்படி நடப்பதற்கு தான்.
அரசு மீது அதிருப்தி
காங்கிரஸ் அரசு திவாலாகிவிட்டது. மானியம் இல்லாமல், தொகுதி மேம்பாடு அடையாது என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களே கோபத்தில் உள்ளனர். அவர்களே அரசுக்கு எதிராக, அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
முதல்வர் சித்தராமையாவால் ஆட்சி செய்ய முடியாவிட்டால், பதவியை ராஜினாமா செய்துவிட்டு வீட்டுக்கு செல்லுங்கள். மாநிலம் முழுதும் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது. ஹிந்துக்கள் தாக்கப்பட்டு, கொல்லப்படுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.