80 வயது பெரியம்மாவை கொன்ற மகன் கைது
80 வயது பெரியம்மாவை கொன்ற மகன் கைது
80 வயது பெரியம்மாவை கொன்ற மகன் கைது
ADDED : ஜூன் 24, 2024 04:51 AM

மாண்டியா : தன் தந்தைக்கும், 80 வயது பெரியம்மாவுக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகித்து, அவரை கொலை செய்தவர், போலீசில் சரண் அடைந்தார்.
மாண்டியா மாவட்டம், அனேகெரேயை சேர்ந்தவர் ராமகிருஷ்ணா. முடி திருத்தம் செய்யும் பணி செய்து வருகிறார். இவரது மகன் ஹர்ஷன், 34. இவர்களுடன், 80 வயது கெம்பம்மா வசித்து வருகிறார்.
அடிக்கடி சண்டை
கெம்பம்மாவின் கணவரும், ராமகிருஷ்ணாவும் சகோதரர்கள். தன் கணவர் 25 ஆண்டுகளுக்கு முன் இறந்ததால், அன்று முதல் இவர்களுடன் கெம்பம்மா வசித்து வருகிறார்.
இதனால் ராமகிருஷ்ணாவின் மனைவி, கோபித்து கொண்டு பல ஆண்டுகளுக்கு முன்பே வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.
இதனால், ஹர்ஷனுக்கும், ராமகிருஷ்ணாவுக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு, இதே பிரச்னை தொடர்பாக குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது.
நேற்று காலை ராமகிருஷ்ணா பணிக்கு சென்றுள்ளார்.
வெளியே சென்றிருந்த ஹர்ஷன், குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது கெம்பம்மாவிடம், ஹர்ஷன் தகராறு செய்துள்ளார். இதனால் கோபமடைந்த அவர், பெரியம்மாவை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு, போலீசில் சரணடைந்தார்.
எஸ்.பி., யதீஷ், சம்பவ இடத்தை பார்வையிட்ட பின் கூறியதாவது:
கெம்பம்மாவுக்கும், ஹர்ஷனின் தந்தைக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாகவும், அதனால் தான் அவரது தாயார் பிரிந்து சென்றதாகவும் ஹர்ஷன் கருதி உள்ளார்.
நேற்று முன்தினம் இது தொடர்பாக ராமகிருஷ்ணாவுக்கும், ஹர்ஷனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
மறுநாள் காலை மீண்டும் பெரியம்மாவிடம் சண்டை போட்டு, அவரை கூர்மையான ஆயுதத்தால் குத்தி கொலை செய்துள்ளார். அவரை கைது செய்து விசாரிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ராமகிருஷ்ணா கூறியதாவது:
எனது மகன் காலையில் குடித்துவிட்டு, பெரியம்மாவிடம் சண்டை போட்டுள்ளார். நாங்கள் மூன்று பேரும் 25 ஆண்டுகளாக ஒன்றாக வசித்து வருகிறோம். காலையில் என் கடைக்கு சென்று விட்டேன்.
எனக்கு போன் செய்த ஹர்ஷன், பெரியம்மாவை கொலை செய்துவிட்டதாக கூறினான். முதலில் விளையாட்டுக்கு கூறுகிறான் என நினைத்தேன். அவனை உடனடியாக போலீசில் சரணடையும்படி கூறினேன்.
கள்ளத்தொடர்பு இல்லை
அவன் எப்போதும் குடித்து விட்டு, யாருடனாவது சண்டையிட்டு கொண்டே இருப்பான். என் சகோதரர் மற்றும் அவர்களது ஒரே மகன் இறந்த பின், அண்ணி எங்களுடன் தான் வசித்து வருகிறார். எனக்கும், அண்ணிக்கும் கள்ளத்தொடர்பு இல்லை. தொடர்பு இருப்பதாக கூறுவது பொய்.
இவ்வாறு அவர் கூறினார்.