விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; 13 வயது சிறுவனிடம் விசாரணை
விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; 13 வயது சிறுவனிடம் விசாரணை
விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; 13 வயது சிறுவனிடம் விசாரணை
ADDED : ஜூன் 24, 2024 04:51 AM

புதுடில்லி : டில்லியில் இருந்து துபாய்க்கு செல்லவிருந்த விமானத்தில் வெடிகுண்டு வைத்ததாக மிரட்டல் விடுத்த, 13 வயது சிறுவனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
டில்லியில் இருந்து கடந்த 18ம் தேதி துபாய் செல்ல இருந்த விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக, டில்லி சர்வதேச விமான நிலையத்திற்கு மின்னஞ்சல் வாயிலாக மிரட்டல் வந்தது. இதையடுத்து, அந்த விமானத்தில் வெடிகுண்டு செயலிழப்பு குழுவினர் சோதனையிட்டதில், சந்தேகத்திற்குரிய வகையில் எந்த பொருளும் சிக்கவில்லை.
இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது, உத்தரகண்ட் மாநிலத்தின் பித்ரோகர் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுவன் என்பதை கண்டறிந்தனர். இதையடுத்து, அச்சிறுவனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து டில்லி விமான நிலைய துணை கமிஷனர் உஷா கூறியதாவது: பிடிபட்ட சிறுவனின் படிப்பிற்காக, அவரது பெற்றோர், சமீபத்தில் மொபைல் போன் அளித்துள்ளனர். அப்போது, விமான நிலையங்களுக்கு இளைஞர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த செய்தியின் தாக்கம் காரணமாக, அதுபோல் இச்சிறுவனும் விமானத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக விமான நிலையத்தின் மின்னஞ்சலுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுபற்றி எந்த தகவலையும் தன் பெற்றோரிடம் அச்சிறுவன் பகிரவில்லை. எனினும், அச்சிறுவனை பிடித்து விசாரித்தபோது, இதை தான் ஒரு வேடிக்கைக்காக செய்ததாக தெரிவித்தார். இதன்பின், அச்சிறுவனுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கி, பெற்றோரிடம் ஒப்படைத்தோம். இவ்வாறு அவர் கூறினார்.