அசாமில் வெள்ள நிலவரம் மோசமடைகிறது 16 லட்சம் பேர் பாதிப்பு! காஜிரங்கா பூங்காவில் 17 விலங்குகள் பலி
அசாமில் வெள்ள நிலவரம் மோசமடைகிறது 16 லட்சம் பேர் பாதிப்பு! காஜிரங்கா பூங்காவில் 17 விலங்குகள் பலி
அசாமில் வெள்ள நிலவரம் மோசமடைகிறது 16 லட்சம் பேர் பாதிப்பு! காஜிரங்கா பூங்காவில் 17 விலங்குகள் பலி
ADDED : ஜூலை 05, 2024 01:00 AM

குவஹாத்தி, வடகிழக்கு மாநிலமான அசாமில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால், இங்கு பாயும் அனைத்து நதிகளும் நிரம்பி அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், 29 மாவட்டங்களில் 16 லட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். காஜிரங்கா தேசிய பூங்காவையும் வெள்ளம் சூழ்ந்ததால், மான்கள் உட்பட 17 விலங்குகள் பலியாகின.
வடகிழக்கு மாநிலமான அசாமில் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது.
இங்கு, ஆண்டுதோறும் வெள்ள பாதிப்பு என்பது வழக்கமான ஒன்றாகும். இந்த ஆண்டில் மழை, வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்டவற்றால், இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக இங்கு பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், பிரம்மபுத்திரா, திகாரு, கோலங்க் உள்ளிட்ட அனைத்து நதிகளிலும், அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழை தொடர்ந்து பெய்த்து வருவதால், வெள்ள நீர் வடிவதற்கான வாய்ப்பு ஏற்படவில்லை.
நிவாரண முகாம்
மாநிலத்தில் மொத்தமுள்ள 35 மாவட்டங்களில், 29 மாவட்டங்களில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மாவட்டங்களில், 16 லட்சம் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
துப்ரி மாவட்டத்தில் மட்டும் 2.23 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தராங்கில் 1.84 லட்சம் பேர், லக்கிம்பூரில் 1.66 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில், முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்; பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் மேற்கொள்வது தொடர்பாக, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், புகழ்பெற்ற காஜிரங்கா தேசிய பூங்காவிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதில், மான்கள் உட்பட 17 விலங்குகள் நீரில் மூழ்கி உயிரிழந்தன. தத்தளித்த 72 விலங்குகள் மீட்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தொலை தொடர்பு பாதிப்பு
மற்றொரு வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்திலும் கனமழை பாதிப்பு அதிகமாக உள்ளது. அங்கு ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக, சியாங்க், கிழக்கு சியாங்க், மேல் சியாங்க், மேற்கு சியாங்க், ஷி யோமி, லேபராடா, மேல் சுபான்சிரி ஆகிய ஏழு மாவட்டங்களில், தொலை தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
மேலும், லோக்பெங் மற்றும் பான்கின் இடையே தேசிய நெடுஞ்சாலையும் துண்டிக்கப்பட்டு உள்ளது.