Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ பிரதமர் மோடியின் பேச்சில் தவறு உள்ளது சபாநாயகருக்கு காங்கிரஸ் கடிதம்

பிரதமர் மோடியின் பேச்சில் தவறு உள்ளது சபாநாயகருக்கு காங்கிரஸ் கடிதம்

பிரதமர் மோடியின் பேச்சில் தவறு உள்ளது சபாநாயகருக்கு காங்கிரஸ் கடிதம்

பிரதமர் மோடியின் பேச்சில் தவறு உள்ளது சபாநாயகருக்கு காங்கிரஸ் கடிதம்

ADDED : ஜூலை 05, 2024 12:58 AM


Google News
புதுடில்லி, ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, பிரதமர் மோடி ஆற்றிய உரையில் பல தவறான தகவல்கள் இடம் பெற்று இருப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது.

விவாதம்


பார்லிமென்டில் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் சமீபத்தில் நடந்தது.

இதில், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலின் பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியது.

அவரது பேச்சின் பல பகுதிகள் சபை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன. அவரது பேச்சில் பல தவறுகள் இருப்பதாக பா.ஜ., நோட்டீஸ் அளித்துஉள்ளது.

'தங்கள் பேச்சால் சபையை தவறாக வழிநடத்த முயற்சிக்கும் உறுப்பினர்கள் எளிதில் தப்ப முடியாது' என, பார்லி., விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

இந்நிலையில், பா.ஜ.,வின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சபையில் 115(1) விதியை செயல்படுத்தும்படி காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாக்கூர், சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்த விதியின்படி, அமைச்சர் அல்லது எம்.பி.,க்களின் பேச்சில் ஏதேனும் தவறு இருந்தால், சபையில் அதை சுட்டிக்காட்டுவதற்கு முன், அந்த விபரங்களை சபாநாயகருக்கு கடிதமாக எழுதி அனுமதி பெற வேண்டும். சபாநாயகர் இந்த விவகாரத்தை சபையில் எழுப்புவார்.

இதன்படி, மாணிக்கம் தாக்கூர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ள தாவது:

லோக்சபாவில் பிரதமர் மோடி மற்றும் அமைச்சர் அனுராக் தாக்குர் பேசிய பேச்சுக்களில் பல தவறான தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

பா.ஜ., ஆட்சிக்கு வருவதற்கு முன் நம் ராணுவத்தில், 'பைடர் ஜெட்' விமானங்கள் இல்லை என அனுராக் தாக்குர் பேசினார்.

நடவடிக்கை


இது முற்றிலும் தவறானது. நம்மிடம், 'ஜாக்குவார், மிக் 29, சுகோய் 30, மிராஜ் 2000, போர் விமானங்கள், அணு குண்டுகள், அக்னி, பிருத்வி, ஆகாஷ், நாக், திரிசுல், பிரமோஸ் உள்ளிட்ட ஏவுகணைகள் இருந்தன.

லோக்சபா தேர்தலில், காங்., தனித்து போட்டியிட்ட 16 மாநிலங்களில் ஓட்டு சதவீதம் குறைந்துவிட்டதாக பிரதமர் தெரிவித்தார்.

ஹிமாச்சல், உத்தரகண்ட், கர்நாடகா, தெலுங்கானாவில் காங்., ஓட்டு சதவீதம் அதிகரித்துஉள்ளது.

மேலும், பெண்களுக்கு 8,500 ரூபாய் உதவித் தொகை தருவதாக கூறி காங்., ஏமாற்றிவிட்டதாகவும் குறிப்பிட்டார்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தருவதாகத் தான் கூறியிருந்தோம். இது போன்ற தவறான தகவல்களை பேசிய இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us