பீஹாரில் 17 நாளில் இடிந்த 12 பாலங்கள் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு
பீஹாரில் 17 நாளில் இடிந்த 12 பாலங்கள் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு
பீஹாரில் 17 நாளில் இடிந்த 12 பாலங்கள் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு
ADDED : ஜூலை 05, 2024 01:01 AM
பாட்னாபீஹாரில் கடந்த 17 நாட்களில் அடுத்தடுத்து 12 பாலங்கள் இடிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலங்கள் இடிந்த சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பீஹார் மாநிலத்தில் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இங்கு, கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து புதிய மற்றும் பழைய பாலங்கள் இடிந்து விழும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில், சரண் மாவட்டத்தின் பனேயாபூர் பகுதியில் உள்ள கிராமங்களை, அண்டை மாவட்டமான சிவானுடன் இணைக்கும் வகையில், கண்டகி ஆற்றின் மீது கட்டப்பட்டிருந்த 15 ஆண்டுகள் பழமையான பாலம் நேற்று அதிகாலை திடீரென இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இதில் யாரும் காயம் அடையவில்லை.
கடந்த 17 நாட்களில் இடிந்த 12வது பாலம் இது. முன்னதாக சிவான், மதுபானி, அராரியா, கிழக்கு சம்பரான், கிஷன்கஞ்ச் ஆகிய மாவட்டங்களில் பாலங்கள் இடிந்தன. இவை குறித்து, சரண் கலெக்டர் அமன் சமீர் கூறியதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் சரண் மாவட்டத்தில், ஜந்தா பஜாரில் ஒரு பாலமும், லஹ்லாபூரில் மற்றொரு பாலமும் இடிந்தன. கண்டகி ஆற்றின் மீது கட்டப்பட்டிருந்த இந்த பாலம் இடிந்ததற்கான காரணம் தெரியவில்லை.
சமீபத்தில் அந்த ஆற்றில் துார் வாரப்பட்ட நிலையில் பாலம் இடிந்துள்ளது. மூன்று பாலங்கள் இடிந்தது தொடர்பாக உயர்மட்டக் குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பீஹாரில் அடுத்தடுத்து பாலங்கள் இடிந்து விழுவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக பெய்த கனமழையே பாலங்கள் இடிந்து விழ காரணம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், பீஹாரில் கட்டுமானம் தொடர்பாக தணிக்கை செய்து பழமையான பாலங்களை வலுப்படுத்தவோ அல்லது இடிக்கவோ செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பிரஜேஷ் சிங் என்பவர் தாக்கல் செய்துள்ள இந்த மனுவில், 'பீஹார்இ வெள்ளத்தால் அடிக்கடி பாதிக்கப்படும் மாநிலம். அடுத்தடுத்து இடிந்துள்ள 10 பாலங்களால் பொதுமக்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. 'பருவமழை காலத்தில் பாலங்களால் மேலும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், உயர்மட்டக் குழு அமைத்து அதன் ஸ்திரத்தன்மை குறித்து தணிக்கை செய்ய வேண்டும்.
'இது தொடர்பாக பீஹார் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்' என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், 'சாலை கட்டுமானம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள், அனைத்து பாலங்களையும் ஆய்வு செய்து, உடனடியாக சீரமைக்கப்பட வேண்டியவற்றை அடையாளம் காண வேண்டும்' என, முதல்வர் நிதீஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.