தங்க புதையல் இருப்பதாக கூறி 8 சவரன் மோசடி பெண்ணை ஏமாற்றிய போலி சித்தர் கைது
தங்க புதையல் இருப்பதாக கூறி 8 சவரன் மோசடி பெண்ணை ஏமாற்றிய போலி சித்தர் கைது
தங்க புதையல் இருப்பதாக கூறி 8 சவரன் மோசடி பெண்ணை ஏமாற்றிய போலி சித்தர் கைது
ADDED : ஜூலை 09, 2024 07:57 PM

பாலக்காடு:கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் செர்ப்புளச்சேரி நெல்லாய பகுதியை சேர்ந்த பெண், வீட்டில் புதையல் இருப்பதாகவும், அதை எடுத்துத் தருகிறேன் என்று கூறி நம்ப வைத்து, ஒருவர் தன், 8 சவரன் நகையை மோசடி செய்து விட்டதாக, செர்ப்புளச்சேரி போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து, இன்ஸ்பெக்டர் முகமதுஹனீபா தலைமையிலான சிறப்பு படை போலீஸ் விசாரணையில், புகாரில் தெரிவித்த, சம்பவம் உண்மை என்பதும், நகை மோசடி செய்தது திருமிற்றைக்கோடு பகுதியை சேர்ந்த ரபீக் மவுலவி, 45, என்பதும் தெரிந்தது. போலீசார் நேற்று அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் முகமது ஹனீபா கூறியதாவது:
தன்னை, 'சித்தர்' என நம்ப வைத்த ரபீக் மவுலவி, பெண்ணை ஏமாற்றி நகை பறித்துள்ளார். அவரது பேச்சை நம்பிய பெண், தன் பிரச்னைகளை அவரிடம் தெரிவித்துள்ளார். அதன்பின், வீட்டினுள் தங்க புதையல் இருக்கிறது. புதையல் கிடைக்கும் பட்சத்தில் அனைத்து பிரச்னைகளும் தீர்ந்து விடும்.
அதற்கு, சில மந்திரங்களை உச்சரித்து பூஜைகள் செய்தால், புதையல் கிடைக்கும் என்றும், இதற்காக வீட்டில் உள்ள தங்க நகையை ஒரு வாரத்துக்கு இடம்மாற்றி வைக்க வேண்டும் என்று, பெண்ணிடம் கூறியுள்ளார்.
அவர் கூறிய படி, மார்ச் 1ம் தேதி 8 பவுன் நகையை ரபீக் மவுலவியின் கூட்டாளி வசம் ஒப்படைத்தார். புதையல் தங்கம் கிடைத்ததும் நகையை வீட்டிற்கு கொண்டு வரலாம் என்று கூறியுள்ளனர்.
இந்நிலையில் புதையல் கிடைக்காததால், நகையை தருமாறு கேட்க, ரபீக் மவுலவியின் மொபைல்போனுக்கு தொடர்பு கொண்ட போது, 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது தெரிந்தது. அதன்பின், அப்பெண் போலீசில் புகார் அளித்தார்.
ரபீக் மவுலவி மீது, 2010ல் இது போன்ற ஒரு வழக்கு பட்டாம்பி போலீஸ் ஸ்டேஷனில் பதிவு செய்யப்பட்டது. இவரது வீட்டில் நடத்திய சோதனையில், ஏராளமான கவரிங் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த மோசடியில் பலருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் உள்ளது. அதனால், தொடர் புலன் விசாரணை நடக்கிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.