தேர்தல் என்பது யுத்தம் அல்ல ஆர்.எஸ்.எஸ்., தலைவர் பேச்சு
தேர்தல் என்பது யுத்தம் அல்ல ஆர்.எஸ்.எஸ்., தலைவர் பேச்சு
தேர்தல் என்பது யுத்தம் அல்ல ஆர்.எஸ்.எஸ்., தலைவர் பேச்சு
ADDED : ஜூன் 12, 2024 01:13 AM

நாக்பூர், தேர்தல் முடிவுகள் வெளியாகி மோடி அரசு மீண்டும் பதவி ஏற்ற பின், முதல் முறையாக ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றினார்.
அவர் கூறியதாவது:
கடந்த ஓராண்டாக மணிப்பூர் அமைதியற்று காணப்படுகிறது. 10 ஆண்டுகளாக அமைதியாக இருந்த மாநிலத்தில், திடீரென துப்பாக்கி கலாசாரம் தலைதுாக்கி உள்ளது.
அங்குள்ள மக்கள் உதவி கேட்டு கூக்குரல் இடுகின்றனர். அதை கவனத்தில் கொள்ள வேண்டிய பொறுப்பு யாருடையது? அரசு இந்த பிரச்னைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கிறது. பொருளாதாரம், ராணுவம், கலை, விளையாட்டு, டெக்னாலஜி போன்ற துறைகளில், 10 வருடமாக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
அதனால் இன்னொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால், நாட்டின் எல்லா பிரச்னைகளும் தீர்க்கப்பட்டு விட்டதாக நினைத்துவிடக் கூடாது.
எந்த பிரச்னையாக இருந்தாலும் அதற்கு இரண்டு பக்கங்கள் உண்டு. அதுதான் இயற்கை. நான் சொல்வது மட்டுமே சரி, மற்றவர்கள் சொல்வது தவறு என்று நினைக்க கூடாது.
என் கருத்தை தவிர வேறு கருத்துக்கு இடமில்லை என நம்பக் கூடாது. பார்லிமென்ட் என்பது அனைத்து தரப்பின் நியாயங்களையும், வாதங்களையும் எடுத்துக் கூற வேண்டிய இடம். எதையும் புறக்கணிக்கவோ, தடுக்கவோ கூடாது.
ஒற்றுமை தேவை
பார்லிமென்டும், தேர்தலும் மாறுபட்ட கருத்துகளை பொது வெளியில் எடுத்து வைத்து, திறந்த மனதுடன் விவாதம் நடத்தி, முடிந்த அளவுக்கு இரு தரப்பும் ஏற்றுக் கொள்கிற வகையில் ஒருமித்த கருத்தை உருவாக்கவே அமைக்கப்பட்ட ஏற்பாடுகள்.
ஆனால், தேர்தல் பிரசாரத்தில் இந்த தடவை நாம் பார்த்தது அப்படிப்பட்ட முயற்சிகள் அல்ல. சமூகத்திலும், மக்களின் மனங்களிலும் கடுமையான தாக்கத்தை உண்டாக்கும் வகையில் தரம் தாழ்ந்த பேச்சும் செயலும் வலம் வந்தன.
டெக்னாலஜியை பயன்படுத்தி அப்பட்டமான பொய்களும் அவதுாறுகளும் பரப்பப்பட்டன.
இரு தரப்பிலுமே எல்லைகளை மதிக்காமல் பிரசாரத்தில் தீவிரம் காட்டினர். தேவையில்லாமல் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பையும் வம்புக்கு இழுத்தனர். தேர்தலில் எதிர்த்து நிற்பவர்கள் எதிரிகள் அல்ல.
அவர்கள் வேறொரு கொள்கைக்கு சொந்தக்காரர்கள். அவர்களின் கருத்தும் மதிக்கப்பட வேண்டியது. அதை எதிர் கருத்தாக நீங்கள் பார்க்கலாம். மறு கருத்தாக, மாற்றுக் கருத்தாக நான் மதிக்கிறேன்.
தேர்தல் என்பது யுத்தம் அல்ல. பலத்தை எல்லாம் காட்டி ஆக்ரோஷமாக தேர்தல் களத்தில் செயல்பட வேண்டிய அவசியமும் இல்லை. தேர்தல் பிரசாரத்தில் கண்ணியமும், நாகரிகமும் அவசியம். இந்த தேர்தலில் அவை பின்பற்றப்படவில்லை.
தேர்தல் என்பது குறுகிய கால செயல்பாடு. அது முடிந்ததும், தேசத்தின் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்பதையும், அதற்கு எல்லா தரப்பின் ஒத்துழைப்பும் தேவை என்பதையும் மனதில் கொண்டால் எல்லைகளை மீறாமல் பிரசாரம் செய்யலாம்.
அரசியல் மாற்றம்
கண்ணியத்தை கடைபிடிப்பவரே உண்மையான மக்கள் சேவகர். பணியில் அவர் நல்லொழுக்கத்தை பின்பற்றுவார். மக்கள் பணி என்பது பெரும் சேவை. எனவே தான் அந்தப் பணி செய்யும் தலைவனை சேவகன் என்கிறோம்.
பொறுப்புகளை கடமையாக கருதி செய்பவர்கள் மனதில் பெருமை உண்டாகலாம். ஆனால் காட்டிக் கொள்ள மாட்டார்கள். மக்களுக்காக நான் அதை செய்தேன், இதை செய்தேன் என உண்மையான சேவகர்கள் தம்பட்டம் அடிக்க மாட்டார்கள். அவர்களிடம் ஆணவம் இருக்காது.
உலகெங்கிலும் சமூகங்கள் படிப்படியாக மேம்பட்டு வந்துள்ளன. அதற்கேற்ப சமூக அரசியல் கட்டமைப்புகள் மாற்றம் பெற்று வருகின்றன.
டாக்டர் அம்பேத்கர் சொன்னதை போல, எந்த ஒரு முக்கியமான சமூக மாற்றத்துக்கும், ஆன்மிக எழுச்சியும் அவசியமாகிறது. ஆயிரம் ஆண்டுகளாக ஒதுக்கப்பட்டும், பின்தள்ளப்பட்டும், பாதிக்கப்பட்ட மக்களைக் கொண்ட சமூகங்களில் அதிருப்தியும் பிளவுபட்ட சிந்தனைகளும் இருந்தால் அது இயல்பானது என்பதை உணர வேண்டும்.
நான் சொல்வது மட்டுமே உண்மை; அது மட்டுமே செல்லுபடியாகும் என்பது முற்றிலும் தவறான அணுகுமுறை. இது, நம் நாட்டுக்கு வெளியே இருந்து இங்கு வந்தவர்களின் கலாசார பின்னணியில் உருவான நம்பிக்கை. நம் கலாசாரத்தில் அப்படி இறுக்கமான கருத்தோட்டம் கிடையாது.
வழிகாட்டும் ரிஷிகள்
எல்லோருடைய எண்ணங்களும், செயல்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை என்பதை நம் ரிஷிகள் வேத காலத்திலேயே உணர்ந்து அங்கீகரித்துள்ளனர். எல்லா விஷயங்களிலும் எல்லோரும் ஏற்றுக் கொள்கிற மாதிரியான முடிவை எவராலும் முன்வைக்க முடியாது.
எனவேதான் பரஸ்பரம் விட்டுக் கொடுத்து ஒரு பொதுவான கருத்தொற்றுமை உருவாக்க அவர்கள் நமக்கு வழிகாட்டினர்.
நம் கொள்கையே சரியானது, மற்றதெல்லாம் தவறானவை; நான் செய்வதே சரி, மற்றவர்கள் செய்வது பிழை என்கிற எண்ணத்தை அடியோடு உதற வேண்டும். தனிப்பட்ட அவரவர் கொள்கைகளை பின்பற்றி நடக்க அனைவருக்கும் சுதந்திரம் உண்டு.
யாரும் மதம் மாறவோ, இடம் மாறவோ அவசியம் கிடையாது. நம் நம்பிக்கைகள் மீது நமக்கு பெருமை இருப்பது குற்றமல்ல; மற்றவர்களின் நம்பிக்கையை மதிக்கத் தவறுவது தான் தவிர்க்க வேண்டிய போக்கு.
இவ்வாறு மோகன் பாகவத் கூறினார்.