ADDED : ஜூன் 12, 2024 01:14 AM
புதுடில்லி, புதிதாக பதவியேற்றுள்ள மத்திய அமைச்சர்கள் மற்றும் இணை அமைச்சர்கள் நேற்று தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறை அலுவலகங்களில் முறைப்படி பொறுப்பேற்றனர்.
பிரதமர் மோடி மற்றும் 71 அமைச்சர்கள் கடந்த 9ல் ஜனாதிபதி மாளிகையில் பதவியேற்றனர். நேற்று முன்தினம் அனைத்து அமைச்சர்களுக்குமான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்ட பெரும்பாலான அமைச்சர்கள் டில்லியில் உள்ள தங்கள் துறையின் அலுவலகங்களில் முறைப்படி பொறுப்பேற்றனர்.
பா.ஜ., தலைவர் நட்டா சுகாதாரம், ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். ரயில்வே துறையை தொடர்ந்து வைத்திருக்கும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், புதிதாக ஒதுக்கப்பட்ட செய்தி மற்றும் ஒலிபரப்பு துறையின் அமைச்சராக பொறுப்பேற்றார்.
தமிழகத்தைச் சேர்ந்த முருகன், தனக்கு புதிதாக ஒதுக்கப்பட்டுள்ள பார்லிமென்ட் விவகாரம், செய்தி மற்றும் ஒலிபரப்பு துறையின் அமைச்சராக பொறுப்பேற்று கொண்டார்.
புதிய அமைச்சரவையில் தொலைத்தொடர்பு துறை அமைச்சராக அறிவிக்கப்பட்ட ஜோதிராதித்ய சிந்தியா, நேற்று பொறுப்பேற்ற பின், 15 ஆண்டுகளுக்கு முன் இதே துறையின் இணை அமைச்சராக இருந்ததை நினைவு கூர்ந்தார்.
இதே போல் புதிதாக அமைச்சர்களான கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த குமாரசாமி, சிராக் பஸ்வான், ராம் மோகன் நாயுடு, அனுப்ரியா படேல் ஆகியோரும் நேற்று பொறுப்பேற்றனர்.