ADDED : ஜூன் 04, 2024 11:01 PM

முடிவுக்கு முன்பே பரிசு
தேர்தல் முடிவு வெளியாவதற்கு முன்பே, மைசூரு தொகுதி பா.ஜ.,வில் போட்டியிட்ட யதுவீரின் விசுவாசிகள், 'யதுவீர் கிருஷ்ண தத்த உடையார், எம்.பி.,' என பொறிக்கப்பட்ட பெயர் பலகையை, யதுவீருக்கு பரிசளித்தனர்.
மைசூரின் சாமுண்டீஸ்வரி மலையின் சாமுண்டீஸ்வரி கோவிலில், பெயர் பலகை வைத்து பூஜிக்கப்பட்டது.
செல்வாக்கை மீட்ட கார்கே
கல்யாண கர்நாடகாவில் பீதர், யாத்கிர், ராய்ச்சூர், கொப்பால், கலபுரகி, பல்லாரி, விஜயநகரா ஆகிய ஏழு மாவட்டங்கள் வருகின்றன. இதில், ராய்ச்சூர், பீதர், கொப்பால், பல்லாரி, கலபுரகி ஆகிய லோக்சபா தொகுதிகளை பா.ஜ.,விடம் இருந்து காங்கிரஸ் பறித்துள்ளது.
கடந்த தேர்தலில், கலபுரகியில், பா.ஜ.,வின் உமேஷ் ஜாதவிடம் தோல்வியடைந்த காங்கிரசின் மல்லிகார்ஜுன கார்கே, இம்முறை, தனது மருமகன் ராதாகிருஷ்ணா தொட்டமணியை களம் இறக்கினார்.
25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டுகள் வித்தியாசத்தில், இவர் வெற்றி பெற்றார். இதன் வாயிலாக, தனது செல்வாக்கை, மல்லிகார்ஜுன கார்கே மீட்டெடுத்துள்ளார்.
இடைத்தேர்தலை சந்திக்கும் சண்டூர்
பல்லாரி சண்டூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் துக்காராம். லோக்சபா தேர்தலில் பல்லாரி வேட்பாளராக களம் இறக்கப்பட்டார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட, பா.ஜ.,வின் ஸ்ரீராமுலுவை தோற்கடித்து, வெற்றி பெற்றுள்ளார். எம்.பி.,யாக தேர்வாகி இருப்பதால், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
இதனால், அவர், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்த பின்னர், சண்டூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்படும்.
அங்கு இடைத்தேர்தலில் அவரது மகள் சவுபர்ணிகா போட்டியிடும் வாய்ப்பு உள்ளது. சண்டூரில் இருந்து தொடர்ந்து, நான்கு முறை வெற்றி பெற்ற துக்காராம், ஒரு முறை அமைச்சராகவும் பணியாற்றி உள்ளார்.