ADDED : ஜூன் 04, 2024 11:00 PM
விஜயபுரா நகரின், ஆதில் ஷாஹி பவனில் ஓட்டு எண்ணிக்கை நடந்தது. இந்த மையத்தில் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டிருந்த சித்தராஜ தொட்டமனிக்கு இதய வலி ஏற்பட்டது. அவரை ராணுவ பள்ளியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது
l ராய்ச்சூர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, யாத்கிரி சட்டசபை தொகுதியின் ஓட்டு எண்ணிக்கை மையத்தில், இருக்கைகள் பற்றாக்குறை ஏற்பட்டது. ஏஜென்டுகள் அமர இருக்கை இல்லாததால், தபால் ஓட்டுகள் எண்ணுவது தாமதமானது. மைக் மூலமாக, இருக்கைகள் வசதி செய்யும்படி ஊழியர்கள் கேட்டனர்
l பீதரில் ஓட்டு எண்ணிக்கை மையத்துக்கு, மொபைல் போன் கொண்டு செல்ல போலீசார் முட்டுக்கட்டை போட்டனர். இதனால் காங்கிரஸ் ஏஜென்டுகள், போலீசார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
l மாவட்ட கலெக்டர் நிதேஷ் பாட்டீல், நகர போலீஸ் கமிஷனர் அங்கு வந்து, ஏஜென்டுகள் முன்னிலையில், பாதுகாப்பு அறையை திறந்தனர்
l பீதரில் ஓட்டு எண்ணிக்கை மையத்துக்கு வந்த பா.ஜ., ஏஜென்டுகள், காவி சால்வை அணிந்து வந்திருந்தனர்
l சாம்ராஜ் நகர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, வருணாவில் ஓட்டு எண்ணிக்கை மையத்தில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் ஓட்டு எண்ணிக்கை தாமதமானது.
l சிக்கபல்லாபூர் லோக்சபா தொகுதியில் போட்டியிட்ட, பா.ஜ.,வின் சுதாகர் வெற்றி பெற்றார். தேர்தல் பிரசாரத்தின்போது, பார்லிமென்ட் வாசல் படியை சுதாகரை மிதிக்க விட மாட்டோம் என, சிக்கபல்லாபூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர் சவால் விட்டார். ஆனால் சுதாகர் வெற்றி பெற்று, பிரதீப் ஈஸ்வர் வாயை அடைத்துஉள்ளார்
l கோலாரில் ஒரு ஓட்டு எண்ணிக்கை மையத்தில், காங்கிரஸ் வேட்பாளர் கவுதம், ம.ஜ.த., வேட்பாளர் மல்லேஷ் பாபு சந்தித்துக் கொண்டனர். இருவரும் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்
l ஆபாச வழக்கில் கைதாகி உள்ள எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா, சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணையில் உள்ளார்.
l தேர்தல் முடிவுகளை பார்க்க, தனது அறையில், 'டிவி' பொருத்தும்படி, பிரஜ்வல் கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் அதை ஏற்க சிறப்பு புலனாய்வு குழுவினர் மறுத்தனர். இதனால் தேர்தல் முடிவுகளை பார்க்க முடியாமல் கவலையில் இருந்தார்.