காங்கிரஸ் கோட்டைக்குள் கொடி ஏற்றிய ம.ஜ.த.,
காங்கிரஸ் கோட்டைக்குள் கொடி ஏற்றிய ம.ஜ.த.,
காங்கிரஸ் கோட்டைக்குள் கொடி ஏற்றிய ம.ஜ.த.,
ADDED : ஜூன் 04, 2024 11:03 PM

கோலார் லோக்சபா தொகுதியில் ம.ஜ.த., - பா.ஜ., கூட்டணி வேட்பாளர் மல்லேஸ் பாபு, காங்கிரஸ் வேட்பாளர் கவுதமை விட, 59,147 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
கோலார் தொகுதியில் கோலார் மாவட்டத்தில் ஆறு, சிக்கபல்லாப்பூர் மாவட்டத்தில் இரண்டு என மொத்தம் எட்டு சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் ஐந்து தொகுதிகள் காங்கிரஸ் வசமும், மூன்று தொகுதிகள் ம.ஜ.த., வசமும் உள்ளன.
இத்தொகுதி எம்.பி.,யாக இருந்தவர் பா.ஜ.,வின் முனிசாமி. பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்ததால் இந்தத் தொகுதி ம.ஜ.த.,வுக்கு கிடைத்தது. இத்தொகுதி பிரசாரத்தில், இரு கட்சியினரும் இணைந்து வேலை பார்த்தது மிகவும் குறைவு தான். ஆனாலும், தொகுதி யை ம.ஜ.த., கைப்பற்றி உள்ளது.
லோக்சபா தேர்தலில் நேற்று வெளியான முடிவில், காங்கிரஸ் வசம் இருந்து வரும் சட்டசபை தொகுதிகளான பங்கார்பேட்டை, கோலார், சிந்தாமணி, மாலுார் ஆகிய தொகுதிகளில் காங்கிரசை விட ம.ஜ.த., வேட்பாளருக்கே அதிக ஓட்டுகள் கிடைத்துள்ளன.
கோலார் காங்கிரசின் கோட்டை என கூறிவந்த நிலை மாறியுள்ளது. தங்கவயல் தொகுதியில் மட்டுமே ம.ஜ.த.,வை விட காங்கிரஸ் 34,331 ஓட்டுகள் அதிகம் பெற்று உள்ளது.
காங்கிரஸ் தொகுதிகள்
சிந்தாமணி: இத்தொகுதியின் எம்.எல்.ஏ., அமைச்சர் சுதாகர். இத்தொகுதியில் காங்கிரஸ் 82,206, ம.ஜ.த., 89,456 ஓட்டுகள் பெற்றுள்ளன. காங்கிரசை விட ம.ஜ.த., 7,250 ஓட்டுகள் அதிகம் பெற்றுள்ளது.
கோலார்: இத்தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ., கொத்துார் மஞ்சுநாத். காங்கிரஸ் 88,130, ம.ஜ.த., 97,831 ஓட்டுகள் பெற்றுள்ளன. ம.ஜ.த., 9,701 ஓட்டுகள் அதிகம் பெற்றுள்ளது.
பங்கார்பேட்டை: இத்தொகுதியில் தொடர்ந்து மூன்று முறை எம்.எல்.ஏ.,வாக இருந்து வருபவர் காங்கிரசின் நாராயணசாமி.
இவரது தொகுதியில் காங்கிரசுக்கு 64,216, ம.ஜ.த.,வுக்கு 92,370 ஓட்டுகள் கிடைத்துள்ளன. ம.ஜ.த., 28,154 ஓட்டுகள் அதிகம் பெற்றுள்ளது.
மாலுார்: இத்தொகுதி எம்.எல்.ஏ., காங்கிரசின் நஞ்சே கவுடா. இங்கு காங்கிரசுக்கு 73,148, ம.ஜ.த.,வுக்கு 86,448 ஓட்டுகள் கிடைத்துள்ளன. 13,300 ஓட்டுகள் ம.ஜ.த., அதிகம் பெற்றுஉள்ளது.
தங்கவயல்: இத்தொகுதியின் எம்.எல்.ஏ., காங்கிரசின் ரூபகலா. இத்தொகுதியில் காங்கிரஸ் 82,980, ம.ஜ.த., 48,549 ஓட்டுகள் பெற்றுள்ளன. ம.ஜ.த.,வை விட காங்கிரஸ் 34,331 ஓட்டுகள் அதிகம் பெற்றுள்ளது.
மொத்தம் ஐந்து காங்கிரஸ் தொகுதிகளில் நான்கில் ம.ஜ.த.,வுக்கு 58,405 ஓட்டுகள் அதிகம் கிடைத்துஉள்ளன.
ம.ஜ.த., தொகுதிகள்
சீனிவாசப்பூர்: இத்தொகுதி எம்.எல்.ஏ., வெங்கட் சிவா ரெட்டி. இங்கு, காங்கிரஸ் 78,297, ம.ஜ.த., 86,042 ஓட்டுகள் பெற்றுள்ளன. காங்கிரசை விட ம.ஜ.த.,வுக்கு 7,745 ஓட்டுகள் அதிகம் கிடைத்து உள்ளது.
முல்பாகல்: இத்தொகுதி எம்.எல்.ஏ., சம்ருத்தி மஞ்சுநாத். ம.ஜ.த.,வுக்கு 82,646, காங்கிரசுக்கு 54,777 ஓட்டுகள் கிடைத்துள்ளன. இதன் மூலம் ம.ஜ.த.,வுக்கு 27,869 ஓட்டுகள் கூடுதலாக கிடைத்து உள்ளது.
சித்லகட்டா: இத்தொகுதி எம்.எல்.ஏ., ரவிகுமார். ம.ஜ.த.,வுக்கு 80,606, காங்கிரசுக்கு 81,047 ஓட்டுகள் கிடைத்தன. இங்கு காங்கிரசுக்கு 441 ஓட்டுகள் அதிகம் கிடைத்துஉள்ளது.
கோலார் லோக்சபா தொகுதியில் கடந்த முறை பா.ஜ.,வின் முனிசாமி, தன்னை அடுத்து வந்த காங்கிரசின் முனியப்பாவை விட 3,90,021 ஓட்டுகள் அதிகம் பெற்றிருந்தார்.
கடந்த முறை ம.ஜ.த., போட்டியிடவில்லை. பா.ஜ., கூட்டணி பலத்தால் வென்றுள்ளது. கடந்த முறை பா.ஜ., 7,00,9,165 ஓட்டுகள் பெற்றது. ஆனால், ம.ஜ.த., 6,63,948 ஓட்டுகளே பெற்றுஉள்ளது.
- நமது நிருபர் -