குற்ற பத்திரிகை ரத்து கோரிக்கை: வினய் குல்கர்னி மனு தள்ளுபடி
குற்ற பத்திரிகை ரத்து கோரிக்கை: வினய் குல்கர்னி மனு தள்ளுபடி
குற்ற பத்திரிகை ரத்து கோரிக்கை: வினய் குல்கர்னி மனு தள்ளுபடி
ADDED : ஜூன் 11, 2024 04:21 PM

தார்வாட் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் யோகேஷ் கவுடா கொலை வழக்கில், காங்கிரஸ் எம்.எல்.ஏ., வினய் குல்கர்னி மீதான குற்றபத்திரிகையை ரத்து செய்ய, உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.
தார்வாட் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் யோகேஷ் கவுடா; பா.ஜ., பிரமுகர். 2016ல் தார்வாடில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் வைத்து, படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து சிறப்பு புலனாய்வு குழுவினர் முதலில் விசாரித்தனர். பா.ஜ., ஆட்சியில் விசாரணை சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது. தார்வாட் ரூரல் காங்கிரஸ் எம்.எல்.ஏ., வினய் குல்கர்னி உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியதால், வினய் குல்கர்னி தற்போது வெளியே உள்ளார். இவ்வழக்கில் வினய் குல்கர்னி உட்பட 13 பேர் மீதும், பெங்களூரில் உள்ள சி.பி.ஐ., நீதிமன்றத்தில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில் தன் மீதான குற்ற பத்திரிகையை ரத்து செய்யும்படி, உயர் நீதிமன்றத்தில் வினய் குல்கர்னி மனு செய்தார். ஆனால் நீதிமன்றம் மறுத்து விட்டது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மனுவை நீதிபதிகள் அகஸ்டின் ஜார்ஜ், சஞ்சய் குமார் அமர்வு விசாரித்து வருகிறது.
நேற்று முன்தினம் நடந்த விசாரணையின் போது, இருதரப்பு வாதங்களையும் நீதிபதிகள் கேட்டனர். விசாரணை அமைப்பு தாக்கல் செய்த, குற்ற பத்திரிகையில் தலையிட எங்களுக்கு அதிகாரம் இல்லை' என்று கூறியதுடன், மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.
- நமது நிருபர் -