ADDED : ஜூன் 11, 2024 04:20 PM

பல்லாரி: நாகேந்திரா ராஜினாமாவால் காலியான அமைச்சர் பதவிக்கு, பல்லாரி மாவட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் இடையில், கடும் போட்டி எழுந்து உள்ளது.
பல்லாரி ரூரல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., நாகேந்திரா. அமைச்சராக பதவி வகித்த இவரிடம் விளையாட்டு துறை, இளைஞர் நலன், பழங்குடியினர் நல துறைகள் இருந்தன. பல்லாரி மாவட்ட பொறுப்பு அமைச்சராகவும் இருந்தார். இந்நிலையில் வால்மீகி மேம்பாட்டு ஆணைய கண்காணிப்பாளர் சந்திரசேகர் தற்கொலை வழக்கில், அமைச்சர் நாகேந்திரா பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று, பா.ஜ., வலியுறுத்தியது.
இதையடுத்து கடந்த 6ம் தேதி, நாகேந்திரா அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அமைச்சரவையில் ஒரு இடம் காலியாக உள்ளது. அந்த இடத்தை பிடிக்க எம்.எல்.ஏ.,க்கள் பரத் ரெட்டி, கம்ப்ளி கணேஷ், கவியப்பா இடையில் கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது. பரத் ரெட்டி இப்போது தான் முதல் முறை எம்.எல்.ஏ., ஆகி இருக்கிறார்.
கம்ப்ளி கணேஷ், கவியப்பா இரண்டாவது முறை, எம்.எல்.ஏ.,க்களாக உள்ளனர். இவர்கள் இருவரில் யாராவது ஒருவருக்கு, வாய்ப்பு கிடைக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, பல்லாரி மாவட்ட பொறுப்பு அமைச்சர் பதவிக்கு, தொழிலாளர் நல அமைச்சர் சந்தோஷ் லாட், சத்தமே இல்லாமல் காய் நகர்த்தி வருகிறார்.
***