அன்றாட வாழ்க்கையில் யோகா: தினேஷ் குண்டுராவ் அழைப்பு
அன்றாட வாழ்க்கையில் யோகா: தினேஷ் குண்டுராவ் அழைப்பு
அன்றாட வாழ்க்கையில் யோகா: தினேஷ் குண்டுராவ் அழைப்பு
ADDED : ஜூன் 12, 2024 12:16 AM

பெங்களூரு : ''யோகா தினத்தை ஒரு நாள் மட்டும் பின்பற்றக் கூடாது. தங்கள் அன்றாட வாழ்க்கையில் தினமும் பின்பற்ற வேண்டும்,'' என சுகாதார துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.
பெங்களூரில், ஆயுஷ் துறை சார்பில் 10வது சர்வதேச யோகா தினத்தை அர்த்தமுள்ள வகையில் கொண்டாடும் வகையில், நேற்று தனியார் ஹோட்டலில் பத்து நாள் யோகோத்சவா நிகழ்ச்சியை சுகாதார துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் துவக்கி வைத்தார்.
அவர் பேசியதாவது:
பாரத சாரண - சாரணியர் அமைப்பு, கர்நாடகா உறைவிடப் பள்ளி கல்வி நிறுவனம், சமூக நலத்துறை, பெண்கள் குழந்தைகள் மேம்பாட்டு துறைகள், யோகா விழாவில் பங்கேற்கின்றன.
* 4 லட்சம் பேர்
இந்நான்கு அமைப்புகளை சேர்ந்த 4 லட்சம் பேர், 10 நாட்கள் மாநிலம் முழுதும் யோகா நிகழ்ச்சிகளை நடத்துவர். இத்திட்டத்தில், ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் ஆயுஷ் துறை சார்பில் ஆயுஷ் சுகாதார பரிசோதனை முகாம் நடத்தப்பட உள்ளன.
பெங்களூரில் உள்ள அபார்ட்மென்ட்கள், ஜெயின் பல்கலைக்கழகம், லுலு மால், மால் ஆப் ஏசியா ஆகிய இடங்களில் யோகா பயிற்சி, ஆயுஷ் மருத்துவ நடைமுறைகள் பற்றிய விழிப்புணர்வு, பரிசோதனை முகாம்கள் நடத்தப்படும்.
பதஞ்சலி யோகா கல்வி குழு, யோகா கங்கோத்ரி அறக்கட்டளை, பதஞ்சலி யோகாஸ்ரம டிரஸ்ட், சன்மயா டிரஸ்ட் மற்றும் இதர தனியார் யோகா அமைப்புகள், இத்திட்டங்களுக்கு தேவையான ஒத்துழைப்பு வழங்குவர்.
* ஆரோக்கியம்
மனநலம், உடல் ஆரோக்கியம் குறித்து பொது மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். நாட்டு மக்கள் ஆரோக்கியமாக இருந்தால், நாடு வலிமையான ஆரோக்கியமான நாடாக மாறும்.
குழந்தைகள், இளைஞர்கள் மன அழுத்தத்துடன் வாழ்கின்றனர். சமூகத்தில் குழந்தைகள், இளைஞர்கள் தீமைகளுக்கு அடிமைகளாக உள்ளனர். இதனால், அவர்களின் உடல்நிலை மேலும் பாதிக்கிறது.
இளைஞர்களிடம் குறைந்த ரத்த அழுத்தம், நீரிழிவு போன்றவை அதிகரித்து வருகிறது. யோகா செய்வதன் மூலம், மனதையும், உடலையும் கட்டுப்படுத்தலாம். தியானம், யோகா செய்வதன் மூலம், வயதானவர்கள் கூட, இளமையுடன் சுறுசுறுப்பாக உணருவர்.
இவ்வாறு அவர் பேசினார்.
***