டெங்கு பாதிப்பு: சுகாதார அமைச்சர் ஆய்வு
டெங்கு பாதிப்பு: சுகாதார அமைச்சர் ஆய்வு
டெங்கு பாதிப்பு: சுகாதார அமைச்சர் ஆய்வு
ADDED : ஜூலை 27, 2024 05:40 AM

எலஹங்கா : டெங்கு பாதிப்பு பகுதிகளில், கொசுக்கள் ஒழிக்கும் பணியை சுகாதார துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் நேரில் ஆய்வு செய்தார்.
பெங்களூரு உட்பட கர்நாடகாவில் டெங்கு பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநகராட்சி கமிஷனர்களும், மாவட்ட கலெக்டர்களும், சுகாதார துறை அதிகாரிகளும், பாதிப்பை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதற்கிடையில், பெங்களூரு நகரின் எலஹங்கா சிங்கேனஹள்ளி பகுதியில், டெங்கு பாதிப்பை ஏற்படுத்தும் லார்வாக்களை ஒழிக்கும் மருந்து நேற்று தெளிக்கப்பட்டது.
இதை சுகாதார துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் நேரில் ஆய்வு செய்தார். மேலும், அங்குள்ள பள்ளிகளுக்கு சென்று, டெங்கு பாதிப்பு குறித்து விழிப்புணர்வுஏற்படுத்தினார்.
பின், அவர் கூறியதாவது:
டெங்கு பரவலை தடுப்பதற்காக, சுகாதார துறை தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. இதனால், அடுத்த மாதம் முதல், பாதிப்போரின் எண்ணிக்கை இறங்கு முகமாக இருக்கும்.
சில மாவட்டங்களில் தற்போது பாதிப்பு குறைந்து வருகிறது. மாநிலத்தின் மொத்த பாதிப்பில், பெங்களூரில் மட்டுமே 50 சதவீதம் பதிவாகி உள்ளது. எனவே சுகாதார துறை அதிகாரிகளும், மாநகராட்சியும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
பாதிப்பு அதிகமாக உள்ள 10 மாவட்டங்களில் துணை இயக்குனர்கள் தலைமையில், அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க அனுப்பி வைக்கப்படுவர். அதிகமானோர் பாதிக்கும் பகுதியில், காய்ச்சல் கிளினிக் துவக்கப்படும். காய்ச்சலால் பாதிக்கப்படும் அனைவருக்கும், டெங்கு பரிசோதனை செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின், பொதுமக்களுடன் சேர்ந்து விழிப்புணர்வு ஊர்வலத்தை துவக்கி வைத்தார். அப்போது, எலஹங்கா பா.ஜ., - எம்.எல்.ஏ., விஸ்வநாத் உடனிருந்தார்.
கேரளா பயணம் தவிர்க்கவும்!
சுகாதார துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறுகையில், ''கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அம்மாநிலத்தை இணைக்கும் கர்நாடகா எல்லை பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடகாவில் நிபா வைரஸ் யாருக்கும் பாதிக்கப்படவில்லை. அவசர பயணம் என்றால் மட்டுமே கேரளாவுக்கு செல்லுங்கள். தேவையின்றி செல்வதை தவிர்க்கவும்,'' என்றார்.