யமுனைக் கரையில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கும் பணி 2 நாட்களுக்கு ஒத்திவைப்பு
யமுனைக் கரையில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கும் பணி 2 நாட்களுக்கு ஒத்திவைப்பு
யமுனைக் கரையில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கும் பணி 2 நாட்களுக்கு ஒத்திவைப்பு
ADDED : ஜூலை 13, 2024 08:19 PM

புதுடில்லி:டில்லி மேம்பாட்டு ஆணையம், மஜ்னு கா திலா குருத்வாரா அருகே, யமுனை ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடிக்கும் பணியை இரண்டு நாட்களுக்கு ஒத்தி வைத்துள்ளது.
இதுகுறித்து, டில்லி மாநகரப் போலீசின் மூத்த அதிகாரி கூறியதாவது:
சிவில் லைன்ஸ் அருகே கைபர் கணவாயில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை டில்லி மேம்பாட்டு ஆணையம் நேற்று இடித்துத் தள்ளியது.
மஜ்னு கா திலா குருத்வாரா அருகே ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டடங்களை இடிக்கும் பணியை இன்று வரை ஒத்தி வைத்துள்ளது.
அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து வந்த ஹிந்து அகதிகள் அந்தப் பகுதியில் ஏராளமாக வசிக்கின்றனர். அவர்களுக்கு ஆக்கிரமிப்பு கட்டடங்களை விட்டு வெளியேறுமாடு டி.டி.ஏ., நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஏப்ரல் 3ம் தேதியும், டில்லி உயர் நீதிமன்றம் மார்ச் 12ம் தேதியும் பிறப்பித்த உத்தரவுப்படி, யமுனை நதிக்கரையில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை டில்லி மேம்பாட்டு ஆணையம் இடித்து அப்புறப்படுத்துகிறது.
இங்கு வசித்த குடும்பங்களுக்கு டில்லி நகர்ப்புற தங்குமிட மேம்பாட்டு வாரியத்தின் தங்குமிடங்களில் தற்காலிக வீடு வழங்கப்படுகிறது.
லோக்சபா தேர்தலுக்கு முன், மஜ்னு கா திலாவில் வசித்த சில பாகிஸ்தானிய அகதிகளுக்கு குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் குடியுரிமைச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.