அணையில் விரிசல்: கிராமத்தினர் பீதி
அணையில் விரிசல்: கிராமத்தினர் பீதி
அணையில் விரிசல்: கிராமத்தினர் பீதி
ADDED : ஜூன் 12, 2024 05:31 PM
சிக்கபல்லாபூர்: ஜக்கலமடகு கிராமத்தின் அருகில் உள்ள, ஜக்கலமடகு அணையில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், சுற்றுப்புற கிராமத்தினர் பீதி அடைந்துள்ளனர்.
சிக்கபல்லாபூரின், ஜக்கலமடகு கிராமம் அருகில் ஜக்கலமடகு அணை உள்ளது. பெங்களூரு ரூரலின், தொட்டபல்லாபூர் நகர், சிக்கபல்லாபூர் நகர் மக்களுக்கு, இதே அணையில் இருந்து குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இரட்டை மாவட்ட மக்களுக்கு, இந்த அணை வர பிரசாதமாக அமைந்துள்ளது.
தற்போது ஜக்கலமடகு அணையில், 16 மீட்டர் உயரத்துக்கு தண்ணீர் உள்ளது. அணையின் கரையில் 50 மீட்டர் அளவில், விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுப்புற கிராமங்களின் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
தகவல் அறிந்த நகர குடிநீர் வினியோக துறை மூத்த பொறியாளர்கள், நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ராக் மெக்கானிக்ஸ் பிரிவு விஞ்ஞானிகள், நகராட்சி அதிகாரிகள் குழுவினர், நேற்று மதியம் அணைக்கு வந்து ஆய்வு நடத்தினர்.
விஞ்ஞானிகள் கூறியதாவது:
ஜக்கலமடகு அணையின் சுற்றுப்பகுதிகளில், 5 கி.மீ., எல்லையில் சுரங்க தொழில் நடக்கிறது. சுரங்க தொழிலுக்கும், அணையின் மேட்டு பகுதியில் விரிசல் ஏற்பட்டதற்கும், எந்த தொடர்பும் இல்லை. மண்ணின் தரம் குறைந்துள்ளது. மழை நீர் இறங்கி, மண் இளகி விரிசல் ஏற்பட்டிருக்கலாம். பழுது பார்த்து விரிசலை சரி செய்யலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.