தெலுங்கானா பள்ளி பாட புத்தகத்தில் முன்னாள் முதல்வர் பெயரால் சர்ச்சை
தெலுங்கானா பள்ளி பாட புத்தகத்தில் முன்னாள் முதல்வர் பெயரால் சர்ச்சை
தெலுங்கானா பள்ளி பாட புத்தகத்தில் முன்னாள் முதல்வர் பெயரால் சர்ச்சை
ADDED : ஜூன் 15, 2024 12:57 AM

ஹைதராபாத்,: தெலுங்கானாவில் நடப்பு கல்வியாண்டில் வழங்கப்பட்ட பள்ளி பாடப்புத்தகங்களில், முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவை முதல்வர் என குறிப்பிடப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முன்னுரை
தெலுங்கானா சட்டசபைக்கு கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, அக்கட்சியைச் சேர்ந்த ரேவந்த் ரெட்டி அங்கு முதல்வராக உள்ளார். ேகாடை விடுமுறை முடிந்து அங்கு கடந்த 12ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான பாடப் புத்தகங்கள், பள்ளிகள் வாயிலாக நேற்று வினியோகிக்கப்பட்டன.
இவற்றில், ஒரு சில புத்தகங்களில் கடந்த ஆண்டு அச்சடிக்கப்பட்ட முன்னுரை இடம் பெற்றுள்ளது. அதில், முதல்வர் பெயர் சந்திரசேகர ராவ் என அச்சடிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து மாநில பள்ளிக் கல்வித் துறை மூத்த அதிகாரியை தொடர்பு கொண்ட போது, 'முன்னாள் முதல்வர் பெயர் குறிப்பிடப்பட்ட பாடப் புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை.
'அதற்கு முன்னரே அவை, கல்வித் துறையின் கிடங்கில் தனியாக எடுத்து வைக்கப்பட்டன. சர்ச்சைக்குரிய பக்கங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளும் பணிகள் நடந்து வருகின்றன' என மழுப்பலாக பதிலளித்தார்.
அலட்சியம்
ஆனால், அந்த புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது என்றும், ஒரு சில பள்ளிகளில் சம்பந்தப்பட்ட பக்கத்தை, முகப்பு பக்கத்தின் உள்ளே மறைத்தபடி ஒட்டுமாறு ஆசிரியர்களுக்கு மாநில கல்வித் துறை பரிந்துரைத்ததாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
எஸ்.சி.இ.ஆர்.டி., எனப்படும் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் அதிகாரிகளின் அலட்சியமே இந்த தவறுக்கு காரணம் என கூறப்படுகிறது.
இதற்கிடையே, 'முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் பெயர் இருப்பதால், பாடப் புத்தகங்களை திரும்பப் பெறுவது, பக்கங்களை கிழிப்பது கண்டனத்துக்குரியது' என பாரத் ராஷ்ட்ரீய சமிதி எம்.எல்.ஏ.,வும், முன்னாள் கல்வி அமைச்சருமான சபிதா இந்திரா ரெட்டி தெரிவித்துள்ளார்.