Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/மஹாராஷ்டிராவில் கூட்டணி தொடருமா? பா.ஜ., - தேசியவாத காங்., வார்த்தை போர்!

மஹாராஷ்டிராவில் கூட்டணி தொடருமா? பா.ஜ., - தேசியவாத காங்., வார்த்தை போர்!

மஹாராஷ்டிராவில் கூட்டணி தொடருமா? பா.ஜ., - தேசியவாத காங்., வார்த்தை போர்!

மஹாராஷ்டிராவில் கூட்டணி தொடருமா? பா.ஜ., - தேசியவாத காங்., வார்த்தை போர்!

ADDED : ஜூன் 14, 2024 11:54 PM


Google News
Latest Tamil News
மும்பை,லோக்சபா தேர்தல் முடிவு மற்றும் ஆர்.எஸ்.எஸ்., விமர்சனத்தைத் தொடர்ந்து, பா.ஜ., மற்றும் தேசியவாத காங்., இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

இதனால், இந்தாண்டு இறுதியில் நடக்கும் சட்ட சபை தேர்தலில் இந்தக் கூட்டணி தொடருமா என்ற கேள்வி எழுந்து உள்ளது.

மஹாராஷ்டிராவில், 288 உறுப்பினர்கள் உள்ள சட்டசபைக்கு இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடக்க உள்ளது.

ஆளும் கூட்டணி


கடந்த 2019ல் நடந்த தேர்தலுக்குப் பின், கட்சிகள் இடையே ஏற்பட்ட மோதல்களால், கூட்டணிகள் மாறின; ஆட்சியும் மாறின. தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா கட்சிகள் உடைந்தன.

தற்போதைக்கு, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, பா.ஜ., மற்றும் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்., ஆகியவை ஆளும் கூட்டணியில் உள்ளன.

காங்கிரஸ், உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா, சரத் பவார் பிரிவு தேசியவாத காங்., ஆகியவை, மஹா விகாஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ளன. தேசிய அளவில் 'இண்டியா' கூட்டணியிலும் இவை இடம்பெற்றுள்ளன.

சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், மாநிலத்தில் மொத்தம் உள்ள, 48 தொகுதிகளில், இண்டியா கூட்டணி, 30 இடங்களில் வென்றது. பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, 17ல் வென்றது. இதில், அஜித் பவாரின் தேசியவாத காங்., ஒரு இடத்தில் மட்டுமே வென்றது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், மத்தியில் அமைந்துள்ள மூன்றாவது ஆட்சியில், தேசியவாத காங்.,குக்கு ஒரு தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

ஆனால், தேசியவாத காங்., கேபினட் அமைச்சர் பதவி கேட்டு, அந்த வாய்ப்பை ஏற்க மறுத்தது.

இது ஒருபக்கம் இருக்க, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் வார இதழான 'ஆர்கனைசரில்' சமீபத்தில் ஒரு கட்டுரை வெளியிடப்பட்டது. அதில், தேசியவாத காங்.,குடன் கூட்டணி அமைத்து, பா.ஜ., தவறு செய்ததாகக் கூறப்பட்டுள்ளது.

அரசியல் நடவடிக்கை


அஜித் பவாரை கூட்டணியில் சேர்த்தது, தேசியவாத காங்.,கை உடைத்தது ஆகியவை தேவையற்ற அரசியல் நடவடிக்கைகள் என, அதில் கூறப்பட்டுள்ளது. இது மக்களிடையேயும், கட்சித் தொண்டர்களிடையேயும் பா.ஜ.,வின் செல்வாக்கை குறைத்ததாகக் கூறப்பட்டுள்ளது.

இந்தாண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், இந்த அரசியல் நிகழ்வுகள், பா.ஜ.,வுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிடலாமா, சிவசேனாவுடன் கூட்டணி அமைக்கலாமா, தேசியவாத காங்கிரசுடனான உறவைத் தொடரலாமா என, பா.ஜ., சார்பில் ரகசிய கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டு வருகிறது.

இந்த விவகாரங்கள் தற்போது கூட்டணிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ., மற்றும் தேசியவாத காங்., நிர்வாகிகள் வார்த்தைப் போரில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராஜ்யசபா எம்.பி.,யும், தேசியவாத காங்., மூத்த தலைவருமான பிரபுல் படேல், ''கூட்டணிக்குள் அனைத்தும் சரியாகச் செல்லவில்லை என்பதையே, இந்தக் கட்டுரை சுட்டிக் காட்டுகிறது. ஆனால், இது பா.ஜ.,வின் நிலைப்பாட்டை உணர்த்தவில்லை என்று நினைக்கிறேன்,'' என, குறிப்பிட்டார்.

அந்தக் கட்சியின் இளைஞர் பிரிவு தலைவர் சூரஜ் சவுகான், சற்று காட்டமாகவே கருத்து தெரிவித்துள்ளார்.

''கூட்டணி சிறப்பாகச் செயல்பட்டால், அது பா.ஜ.,வால் என்று கூறுவர். அதே நேரத்தில் தோல்வியடைந்தால், அதற்கு அஜித் பவாரை காரணம் காட்டுவர்,'' என்றார்.

இதற்கு, பா.ஜ.,வின் மூத்த தலைவர் பிரவின் தரேகர் கூறியுள்ளதாவது:

ஆர்.எஸ்.எஸ்., எங்களுடைய சித்தாந்த அமைப்பு. அதைப் பற்றி தவறான கருத்துகள் தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும். இவ்வளவு அவசரப்படக் கூடாது. தேசியவாத காங்., குறித்து பா.ஜ., எதுவும் கூறவில்லை. எந்தப் பிரச்னையிருந்தாலும், கூட்டணி கூட்டங்களில் விவாதிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us