பதவி ஏற்பு விழாவில் சிறுத்தை? வீடியோ வெளியானதால் அதிர்ச்சி!
பதவி ஏற்பு விழாவில் சிறுத்தை? வீடியோ வெளியானதால் அதிர்ச்சி!
பதவி ஏற்பு விழாவில் சிறுத்தை? வீடியோ வெளியானதால் அதிர்ச்சி!
ADDED : ஜூன் 11, 2024 01:03 AM

புதுடில்லி, பிரதமர் மோடி பதவி ஏற்பு விழாவின் போது, ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் அமர்ந்திருந்த மேடையின் பின்புறம் சிறுத்தை ஒன்று சத்தமில்லாமல் நடந்து செல்லும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டில்லி ஜனாதிபதி மாளிகையின் முன்புறம், பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறை பிரதமராக நேற்று முன்தினம் பதவி ஏற்றார். பிரதமர் உட்பட, 30 கேபினட் அமைச்சர்கள் ஐந்து இணை அமைச்சர்கள் - தனிப்பொறுப்பு, 36 இணை அமைச்சர்கள் என, 72 பேர் பதவி ஏற்றனர். ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
பல்வேறு நாட்டு தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க, 8,000 பேர் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டு இருந்தனர். நேற்று முன்தினம் மாலை 7:15க்கு துவங்கிய நிகழ்ச்சி மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நடந்தது.
பதவி ஏற்பு விழா நிகழ்வு, பல்வேறு ஊடகங்களிலும் நேரலையில் ஒளிபரப்பாயின. பா.ஜ., -- எம்.பி., துர்கா தாஸ் பதவி ஏற்றுக் கொண்ட பின், ஜனாதிபதிக்கு வணக்கம் சொல்லி விடை பெற்ற போது, மேடைக்கு பின்புறம் உள்ள படிக்கட்டுக்கு மேல் உள்ள காரிடாரில் மிருகம் ஒன்று நடந்து செல்லும் காட்சி, 'வீடியோ'வில் பதிவாகி உள்ளது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் நேற்று வேகமாக பரவியது. அது, பூனை என சிலரும், நாய் என சிலரும் கூறிவந்த நிலையில், அதன் வால் மற்றும் பின்னங்கால்களை பார்க்கையில், அது சிறுத்தையை போல் உள்ளது தெளிவாக தெரிகிறது.
விழாவினால் எழுந்த சத்தம் மற்றும் ஒளியை கண்டுகொள்ளாமல் ஜனாதிபதி மாளிகைக்குள் அந்த மிருகம் அமைதியாக நடந்து செல்லும் காட்சி பார்ப்பவர்களை திடுக்கிட வைத்துள்ளது. அது சிறுத்தை தான் என பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி, பிரதமர், ஒட்டுமொத்த அமைச்சர்கள் குழு அமர்ந்திருந்த மேடையின் பின்புறம் சிறுத்தை நடந்து சென்ற சம்பவம் நேற்று பரபரப்பான பேசு பொருளானது. இருப்பினும், இது தொடர்பாக ஜனாதிபதி மாளிகை உறுதியான தகவலை தெரிவிக்கவில்லை.