பி.எம்.ஓ., அதிகார மையம் அல்ல மக்களின் அலுவலகம்: மோடி
பி.எம்.ஓ., அதிகார மையம் அல்ல மக்களின் அலுவலகம்: மோடி
பி.எம்.ஓ., அதிகார மையம் அல்ல மக்களின் அலுவலகம்: மோடி
ADDED : ஜூன் 11, 2024 01:04 AM

புதுடில்லி, “பிரதமர் அலுவலகம் என்பது உயர் அதிகார மையமோ அல்லது மோடியின் அலுவலகமோ அல்ல; இது மக்களின் அலுவலகம்,” என, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள நரேந்திர மோடி, நேற்று தன் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார்.
பி.எம்.ஓ., எனப்படும் பிரதமர் அலுவலகத்துக்கு வந்த அவரை, அங்குள்ள அதிகாரிகள், ஊழியர்கள் வரவேற்றனர். அப்போது அவர்கள் இடையே மோடி பேசியதாவது:
நீண்ட காலமாக, பிரதமர் அலுவலகம் என்பது, நாட்டின் உச்சபட்ச அதிகார மையம் என்ற கருத்து இருந்தது. நான் அதிகாரத்தை விரும்புபவன் அல்ல. அதிகாரத்தை பெற வேண்டும் என்று விரும்புபவனும் அல்ல. அது என் விருப்பமும், வழிமுறையும் அல்ல.
அதனால் தான், 10 ஆண்டுகளுக்கு முன், இந்த கண்ணோட்டத்தை மாற்றும் முயற்சியை துவக்கினேன். பி.எம்.ஓ., என்பது மோடியின் பி.எம்.ஓ., அல்ல; அது மக்களின் பி.எம்.ஓ.,
நான், 140 கோடி மக்களின் நலனுக்காக என்னை அர்ப்பணித்துள்ளேன். என் ஒவ்வொரு வினாடியும் அவர்களுக்கானது. நாட்டை, 2047ல் வளர்ந்த நாடாக்கும் நோக்கத்தோடு உள்ளோம். அதற்காக, 24 மணி நேரமும் உழைக்கத் தயாராக உள்ளேன்.
என் இதயத்தில், 140 கோடி பேரைத் தவிர வேறு யாரும் இல்லை. அவர்களை நான் நம் நாட்டு மக்களாக பார்க்கவில்லை. கடவுளின் உருவமாக பார்க்கிறேன். அதனால்தான், எந்த முடிவை இந்த அரசு எடுத்தாலும், அதை, 140 கோடி பேரை வழிபடுவதாகவே பார்க்கிறேன்.
காலையில் இந்த நேரத்துக்கு வருவது, மாலையில் இந்த நேரத்துக்கு வீடு திரும்புவது என்பதை பார்ப்பவர்கள் நாம் அல்ல. நாம் நேரம் பார்ப்பவர்கள் அல்ல, நம் சிந்தனைக்கும் எல்லை இல்லை.
ஒரு வேலையை செய்து முடிப்பது என்பது நல்ல விஷயம்தான். ஆனால், அதில் நம் மதிப்பு கூட்டல் இருக்க வேண்டும்.
இதைத்தான், உங்களிடம் நான் எதிர்பார்க்கிறேன். நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட்டால், எந்த கனவையும், எந்த எதிர்பார்ப்பையும் நிறைவேற்ற முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.