ADDED : ஜூலை 21, 2024 04:18 AM

பணஜி : கோவா அருகே கடற்கரை பகுதியில், இலங்கை நோக்கி சென்ற சரக்கு கப்பலில் திடீரென தீப்பிடித்தது. இந்திய கடற்படையைச் சேர்ந்த மூன்று கப்பல்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
குஜராத்தில் முந்த்ரா தனியார் துறைமுகத்தில் இருந்து சரக்கு கப்பல் ஒன்று பொருட்களை ஏற்றிக்கொண்டு இலங்கையின் கொழும்பு துறைமுகத்துக்கு சென்று கொண்டிருந்தது.
இந்த கப்பல் கோவா மற்றும் கர்நாடகாவின் கர்வார் அருகே நேற்று முன்தினம் சென்றபோது திடீரென தீப்பிடித்து எரிந்தது. கப்பலில் இருந்த ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை.
இது குறித்து இந்திய கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சுஜீத், சசேத் மற்றும் சாம்ராட் ஆகிய கப்பல்களை கான்வார் பகுதிக்கு அனுப்பி சரக்கு கப்பலில் பற்றி எரியும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தினர்.
கேரளாவின் கொச்சியில் இருந்தும் விமானத்தை வரவழைத்து ஊழியர்களை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்திய கடலோர காவல்படை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'கடந்த 12 மணி நேரமாக சரக்கு கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் மூன்று கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.