Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ நீட் தேர்வு முழு ரிசல்ட் வெளியீடு; அதிர்ச்சி அளித்த ஹரியானா மையம்

நீட் தேர்வு முழு ரிசல்ட் வெளியீடு; அதிர்ச்சி அளித்த ஹரியானா மையம்

நீட் தேர்வு முழு ரிசல்ட் வெளியீடு; அதிர்ச்சி அளித்த ஹரியானா மையம்

நீட் தேர்வு முழு ரிசல்ட் வெளியீடு; அதிர்ச்சி அளித்த ஹரியானா மையம்

UPDATED : ஜூலை 21, 2024 10:04 AMADDED : ஜூலை 21, 2024 03:47 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான, 'நீட்' நுழைவு தேர்வு முழு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. முன்பு ஆறு பேர் முழு மதிப்பெண் பெற்ற ஹரியானா மையத்தில், ஒருவர் கூட, 682 மதிப்பெண்ணை தாண்டவில்லை.

இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு, கடந்த, மே 5ம் தேதி நடந்தது. இதில், வினாத்தாள் லீக் உட்பட பல மோசடிகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பான வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. கடந்த ஜூன் 4ம் தேதி வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளின்படி, 67 பேர் 720க்கு 720 மதிப்பெண் பெற்றனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

குறிப்பாக ஹரியானாவின் பஹதுார்கர்கில் உள்ள ஹர்தயால் பப்ளிக் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில், தேர்வு எழுதிய ஆறு பேர் முதலிடத்தை பிடித்திருந்தனர். இந்த தேர்வு மையம் உட்பட சில தேர்வு மையங்களில், 1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டிருந்தது. இதை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், மறு தேர்வு நடத்த உத்தரவிட்டிருந்தது. இதில், 800 பேர் மறுதேர்வு எழுதினர். நீட் தேர்வு தொடர்பாக, ஜூன் 4ம் தேதி வெளியிடப்பட்ட முடிவுகளின்படி, அந்தந்த மாணவர்கள் தங்களுடைய மதிப்பெண் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும்.

இந்நிலையில், தேர்வு மையம் வாரியாக மற்றும் நகரம் வாயிலாக முழு மதிப்பெண்கள் பட்டியலை வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்து. அதே நேரத்தில் மாணவர்களின் விபரங்கள் மறைக்கும்படி அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது. அந்த உத்தரவின்படி முழு பட்டியலை தேர்வை நடத்திய, என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை நேற்று மதியம் வெளியிட்டது.

இந்தத் தகவல்களை ஆராய்ந்தபோது, ஹரியானாவின் பஹதூர்கர்கில் உள்ள ஹர்தயால் பப்ளிக் பள்ளி தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய, 494 மாணவர்களில் ஒருவர் மட்டுமே, 682 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மேலும் 13 மாணவர்கள், 600க்கு அதிகமான மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். யாரும் முழு மதிப்பெண் பெறவில்லை.

சர்ச்சைக்குள்ளான பீஹாரின் ஹசாரிபாகில் உள்ள ஓயாசிஸ் பப்ளிக் பள்ளி தேர்வு மையத்தில், 701 பேர் தேர்வு எழுதினர். இதில் அதிகபட்ச மதிப்பெண், 700க்கு கீழ் உள்ளது. ஏழு மாணவர்கள், 650க்கு அதிகமாகவும், 23 மாணவர்கள், 600க்கு அதிகமாகவும், 46 மாணவர்கள், 550க்கு அதிகமாகவும் மதிப்பெண் பெற்றுள்ளனர்.

அதேபோல் சர்ச்சையில் சிக்கியுள்ள குஜராத்தின் கோத்ராவில் உள்ள ஜலராம் இன்டர்நேஷனல் பள்ளி தேர்வு மையத்தில், 1,838 மாணவர்கள் தேர்வு எழுதினர். இங்கும், அதிகபட்ச மதிப்பெண், 700க்கு குறைவாகவே உள்ளது. இங்கு ஐந்து பேர், 650க்கு அதிகமாகவும், 14 பேர் 600க்கு அதிகமாகவும், 31 பேர், 550க்கு அதிகமாகவும் பெற்றுள்ளனர். அதே நேரத்தில், அலகாபாதில் உள்ள ஒரு மையத்தில், தேர்வெழுதிய, 676 பேரில், 12 பேர், 700க்கு அதிகமான மதிப்பெண் பெற்றுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

நீட் தேர்வின் பயற்சி மையமாக கருதப்படும் ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்தின் தேர்வு முடிவுகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இந்த மாவட்டத்தில், 149 மாணவர்கள், 700க்கும் அதிகமான மதிப்பெண் பெற்றுள்ளனர். இதைத் தவிர, 2,-037 மாணவர்கள், 650க்கு அதிகமாகவும், 4,297 பேர், 600க்கு அதிகமான மதிப்பெண் பெற்றுள்ளனர். நாடு முழுதும் முதல், 50 இடங்களைப் பிடித்தவர்களில், 29 பேர், இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இதைத் தவிர, இந்த மாவட்டத்தில், 6,038 பேர், 550க்கு அதிகமாகவும், 8,225 பேர், 500க்கு அதிகமான மதிப்பெண்ணும் பெற்றுள்ளனர்.

அதேபோல் குஜராத்தின் ராஜ்கோட்டில் உள்ள ராஜ்கோட் பொறியியல் கல்லுாரி மையத்தில் தேர்வு எழுதிய, 1,968 பேரில், 112 பேர், 700க்கு அதிகமான மதிப்பெண் பெற்றுள்ளனர். மேலும், 112 பேர், 650க்கு அதிகமான மதிப்பெண் பெற்றுள்ளனர். தமிழகத்தின் நாமக்கல்லில் உள்ல பூவை பொறியியல் கல்லூரி மையத்தில் தேர்வு எழுதிய, 1,017 பேரில், இரண்டு பேர் மட்டுமே, 7-0-0க்கு அதிகமான மதிப்பெண் பெற்றுள்ளனர். அதே நேரத்தில், 52 மாணவர்கள், 650க்கு அதிகமான மதிப்பெண் பெற்றுள்ளனர்.

மையத்தை மாற்ற முடியாது!

நீட் தேர்வு தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நாளை மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. முன்னதாக, தேர்வு மையங்களை எத்தனை மாணவர்கள் மாற்றினர் என்று பதிலளிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இது குறித்து, என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள், அதில் சில திருத்தங்கள் செய்வதற்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. அதே நேரத்தில், தேர்வு மையங்களை மாற்றுவதற்கு கோர முடியாது. வேண்டுமானால், தேர்வு எழுதும் நகரத்தை மாற்றக் கோர முடியும். அது குறித்து உரிய முறையில் ஆராய்ந்து, அந்த கோரிக்கை ஏற்கப்படலாம் அல்லது நிராகரிக்கப்படலாம். இதை உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்க உள்ளோம்.திருத்தங்கள் கேட்டு, 1.25 விண்ணப்பங்கள் வந்தன. எதற்கெதற்கு மாற்றங்கள் கோரி விண்ணப்பங்கள் வந்தன. அவற்றில் எவை ஏற்கப்பட்டன; எவை நிராகரிக்கப்பட்டன என்ற விபரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளோம்.இவ்வாறு என்.டி.ஏ., கூறியுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us