சுரேஷ் தோல்விக்கு ஆறுதல் கூறிய பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள்
சுரேஷ் தோல்விக்கு ஆறுதல் கூறிய பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள்
சுரேஷ் தோல்விக்கு ஆறுதல் கூறிய பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள்
ADDED : ஜூன் 05, 2024 10:10 PM
பெங்களூரு: லோக்சபா தேர்தலில் தோற்ற காங்கிரஸ் முன்னாள் எம்.பி., சுரேஷ் வீட்டுக்கு பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் சோமசேகர், சிவராம் ஹெப்பார் சென்று, அவருக்கு ஆறுதல் கூறினர்.
கடந்த 2019 லோக்சபா தேர்தலில், காங்கிரசின் மானத்தை காப்பாற்றியது பெங்களூரு ரூரல் லோக்சபா தொகுதிதான். 28 தொகுதிகளில் போட்டியிட்டும், இந்த ஒரு தொகுதியில் மட்டுமே கட்சி வேட்பாளர் சுரேஷ் வெற்றி பெற்றிருந்தார்.
இம்முறை தேர்தலிலும், பெங்களூரு ரூரல் தொகுதியில், சுரேஷ் போட்டியிட்டார்.
இவரை தோற்கடிக்க பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி தலைவர்கள் வகுத்த வியூகம் வெற்றி அடைந்தது. தம்பியின் தொகுதியை தக்க வைத்து கொள்ள, துணை முதல்வர் சிவகுமார் செய்த முயற்சி பலனளிக்கவில்லை.
யாரும் எதிர்பாராத வகையில், சுரேஷ் தோற்றார். பா.ஜ.,வின் டாக்டர் மஞ்சுநாத் வெற்றி பெற்றார். தோற்ற வருத்தத்தில் உள்ள சுரேஷின் வீட்டுக்கு காங்., தலைவர்கள் சென்று, ஆறுதல் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், பா.ஜ., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் சோமசேகர், சிவராம் ஹெப்பார், நேற்று மதியம் பெங்களூரில் உள்ள சுரேஷின் இல்லத்துக்கு சென்றனர். அவருக்கு ஆறுதல் கூறினர். சிவகுமாருக்கு, சோமசேகர் நெருக்கமானவர். பா.ஜ.,வில் இருந்தாலும், காங்கிரசாருடன் தொடர்பில் உள்ளனர். இப்போது பகிரங்கமாகவே சுரேஷின் இல்லத்துக்கு சென்றுள்ளனர். இதனால் பா.ஜ., தலைவர்கள் எரிச்சல் அடைந்துள்ளனர்.
சோமசேகரும், சிவராம் ஹெப்பாரும், பா.ஜ.,வில் இருந்து ஒரு காலை வெளியே எடுத்து வைத்து வெகு நாட்கள் ஆகின்றன. இவர்களை சமாதானம் செய்தாலும் பயனில்லை என்பதை உணர்ந்த கட்சி மேலிடம், இருவரையும் கண்டு கொள்ளவில்லை. ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், பகிரங்கமாகவே, காங்கிரஸ் தலைவர்கள் வீட்டுக்கு சென்று வருகின்றனர்.