பெங்., விதான் சவுதா, விகாஸ் சவுதா மாநகராட்சிக்கு ரூ.7 கோடி பாக்கி
பெங்., விதான் சவுதா, விகாஸ் சவுதா மாநகராட்சிக்கு ரூ.7 கோடி பாக்கி
பெங்., விதான் சவுதா, விகாஸ் சவுதா மாநகராட்சிக்கு ரூ.7 கோடி பாக்கி
ADDED : ஜூலை 18, 2024 10:45 PM
பெங்களூரு: அரசு சார்ந்த விதான் சவுதா, விகாஸ் சவுதா கட்டடங்கள், 17 ஆண்டுகளாக சேவை கட்டணம் 7 கோடி ரூபாயை பாக்கி வைத்துள்ளன. இதை செலுத்தும்படி மாநகராட்சி மன்றாடுகிறது.
பெங்களூரு மாநகராட்சிக்கு தனியார் நிறுவனங்கள் மட்டுமின்றி, அரசு நிறுவனங்களும் கோடிக்கணக்கான ரூபாய் வரி பாக்கி வைத்துள்ளன. இதை வசூலிக்க முடியாமல் மாநகராட்சி திணறுகிறது.
ஓ.டி.எஸ்.,
வரி பாக்கி செலுத்த, பொது மக்களை ஊக்கப்படுத்தும் நோக்கில், மாநகராட்சி பல சலுகைகளை அளித்துள்ளது.
'ஒன் டைம் செட்டில்மென்ட்' என்ற பெயரில், வரி பாக்கியை மொத்தமாக செலுத்தினால், வட்டி மற்றும் அபராதம் தள்ளுபடி செய்யப்படுகிறது.ஆயினும், இதை பெரும்பாலான பொது மக்கள் பயன்படுத்தவில்லை.
அரசு சார்ந்த சொத்துகளின், வரி பாக்கிக்கும் இந்த சலுகை பொருந்தும். பெங்களூரின் விதான் சவுதா, விகாஸ் சவுதா கட்டடங்களும், 17 ஆண்டுகளாக வரி பாக்கி வைத்துள்ளன.
கடந்த 2008ல் பெங்களூரு நகராட்சி, பெங்களூரு மாநகராட்சியான போது, அரசு சார்ந்த விதான் சவுதா, விகாஸ் சவுதா கட்டடங்களுக்கு, சொத்து வரியை மாநகராட்சி ரத்து செய்தது.
அதே நேரம், இரண்டு கட்டடங்களின் வெளி வளாக சாலைகளை நிர்வகிப்பது, குப்பை அள்ளுவது உட்பட பல்வேறு பணிகளை மாநகராட்சி நிர்வகிக்கிறது.
எனவே, சொத்து வரியுடன் சேவை கட்டணம் வசூலிக்கிறது. சொத்து வரி ரத்தானதால், சேவை கட்டணத்தை மட்டும் செலுத்த வேண்டும். ஆனால் 17 ஆண்டுகளாக, சேவை கட்டணம் செலுத்தப்படவில்லை.
ஜூலை 31ல் நிறைவு
விதான் சவுதா 5.35 கோடி ரூபாய், விகாஸ் சவுதா 2.14 கோடி ரூபாய் சேவை கட்டணம் பாக்கி வைத்துள்ளன. ஒன் டைம் செட்டில்மென்ட் சலுகை, ஜூலை 31ல் முடிவடைகிறது.
அதன்பின் வட்டி, அபராதம் செலுத்த வேண்டும். சலுகையை பயன்படுத்தி, ஜூலை 31க்குள் சேவை கட்டணத்தை செலுத்தும்படி விதான் சவுதா, விகாஸ் சவுதாவை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றுள்ள, ஊழியர் மற்றும் நிர்வாக மேம்பாட்டு துறையிடம் மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஆனால் ஊழியர், நிர்வாக மேம்பாட்டு துறை, சேவை கட்டணத்தையும் ரத்து செய்யும்படி முரண்டு பிடிக்கிறது. இதை ஏற்க மறுத்த மாநகராட்சி, ரத்து செய்ய முடியாது என கடிதம் எழுத முடிவு செய்துள்ளது.
பெங்களூரு மாநகராட்சி வருவாய்ப்பிரிவு சிறப்பு கமிஷனர் முனிஷ் மவுத்கில் கூறியதாவது:
விதான் சவுதா, விகாஸ் சவுதா கட்டடங்களுக்கு, ஏற்கனவே சொத்து வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. சொத்து வரியுடன் சேவை கட்டணத்தையும், ரத்து செய்யும்படி ஊழியர் மற்றும் நிர்வாக மேம்பாட்டு துறை செயலர் சார்பில், மாநகராட்சிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
விரைவில் கடிதம்
சாலையை நிர்வகிப்பது, குப்பை அள்ளுவது உட்பட பல்வேறு சேவைகளை மாநகராட்சி அளிக்கிறது. எனவே சேவை கட்டணத்தை ரத்து செய்ய முடியாது. ஓ.டி.எஸ்., திட்டத்தின் கீழ், சேவை கட்டணத்தை செலுத்தினால், வட்டியோ, அபராதமோ இருக்காது. ஜூலை 31க்குள் சேவை கட்டண பாக்கியை செலுத்தும்படி, நாங்கள் கடிதம் எழுதுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.