தர்ஷன் உட்பட 17 பேருக்கு மேலும் 14 நாட்கள் சிறை
தர்ஷன் உட்பட 17 பேருக்கு மேலும் 14 நாட்கள் சிறை
தர்ஷன் உட்பட 17 பேருக்கு மேலும் 14 நாட்கள் சிறை
ADDED : ஜூலை 18, 2024 10:47 PM

பெங்களூரு: ரேணுகாசாமி கொலை வழக்கில் கைதான நடிகர் தர்ஷன் உட்பட 17 பேரின், நீதிமன்ற காவல் மேலும் 14 நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளது.
சித்ரதுர்காவை சேர்ந்தவர் ரேணுகாசாமி, 33. நடிகர் தர்ஷனின் தீவிர ரசிகர்.
தர்ஷனின் நெருங்கிய தோழியான பவித்ரா கவுடாவுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பியதால், கடந்த மாதம் 8ம் தேதி ரேணுகாசாமி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தர்ஷன், பவித்ரா உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
'ரிமாண்ட்' மனு
இவர்கள் 17 பேரின் நீதிமன்ற காவல் நேற்றுடன் நிறைவடைந்தது. இதனால் 17 பேரையும் வீடியோ கான்பரன்ஸ் மூலம், பெங்களூரு 24 வது ஏ.சி.எம்.எம்., நீதிமன்ற நீதிபதி விஸ்வநாத் முன்பு, போலீசார் ஆஜர்படுத்தினர்.
தர்ஷன் உட்பட 17 பேர் சார்பில் வக்கீல்கள் யாரும் ஜாமின் கேட்கவில்லை. அதே நேரம் அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் பிரசன்னகுமார், தர்ஷன் உட்பட 17 பேரையும் மீண்டும் நீதிமன்ற காவலில் அடைக்க வேண்டும் என்று, 'ரிமாண்ட்' மனு தாக்கல் செய்தார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி தர்ஷன் உட்பட 17 பேரையும், மேலும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார்.
இந்நிலையில், அரசு தரப்பில் தாக்கல் செய்த ரிமாண்ட் மனுவில், 17 பேரையும் மீண்டும் எதற்காக நீதிமன்ற காவலில் அடைக்க வேண்டும் என்பதற்கு சில காரணங்கள் இடம் பெற்று இருப்பதாக சொல்லப்படுகிறது.
அது பற்றிய விவரம்:
1. கைதான 17 பேருக்கும் கடத்தல், கொலை, ஆதாரங்களை அழித்ததில் நேரடி தொடர்புள்ளது
2. இந்த 17 பேரும் கொலையில் நேரடியாக சம்பந்தப்பட்டது, விசாரணையில் தெரிந்துள்ளது
3. இந்த 17 பேருக்கும் எதிராக நேரில் கண்ட சாட்சி, தொழில்நுட்ப சாட்சிகள் உள்ளன
4. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 83.55 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
5. கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்களை கண்டுபிடிக்கும் பணி நிலுவையில் உள்ளது
6. கொலை வழக்கில் கைதாகி உள்ள தீபக் பயன்படுத்திய ஸ்கூட்டர் திருடப்பட்ட வாகனம்
8. பறிமுதல் செய்யப்பட்ட கார் ஹெப்பகோடி போலீஸ் நிலையத்தில் திருட்டு வழக்கு சம்பந்தமாக தேடப்பட்டு வந்த கார்.
9. தர்ஷன், பவித்ரா ஆகியோர் வேறு ஒருவர் பெயரில் வாங்கப்பட்ட சிம்கார்டுகள் பயன்படுத்தி உள்ளனர்
10. ஹைதராபாத் தடய ஆய்வியல் மையத்திலிருந்து அறிக்கை வர வேண்டி உள்ளது
11. கொலைக்கு முன்பும், பின்பும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மொபைல் போன்களில் உரையாடி உள்ளனர்
12. கொலை நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்யும் பணி இன்னும் நடந்து வருகிறது
13. கொலை வழக்கில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பலருக்கு தொடர்பு உள்ளது
14. கைதானவர்கள் அனைவரும் பண பலம், செல்வாக்கு உள்ளவர்கள். இதனால் அவர்கள் வெளியே சென்றால் சாட்சிகளை மிரட்டி அழிக்க நேரிடும்
மேற்கண்டவை உட்பட மேலும் சில காரணங்களை போலீசார் கூறியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.