ஜம்மு - காஷ்மீர் கவர்னருக்கு கூடுதல் அதிகாரம்!: அமலுக்கு வந்தது சட்ட திருத்தம்
ஜம்மு - காஷ்மீர் கவர்னருக்கு கூடுதல் அதிகாரம்!: அமலுக்கு வந்தது சட்ட திருத்தம்
ஜம்மு - காஷ்மீர் கவர்னருக்கு கூடுதல் அதிகாரம்!: அமலுக்கு வந்தது சட்ட திருத்தம்
ADDED : ஜூலை 13, 2024 11:04 PM
புதுடில்லி: ஜம்மு - காஷ்மீரில் துணைநிலை கவர்னருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து, 2019ல் ரத்து செய்யப்பட்டது. மேலும், ஜம்மு - காஷ்மீர், லடாக் என, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இவற்றில் ஜம்மு - காஷ்மீர் சட்டசபையுடன் கூடியதாக இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, வரும் செப்டம்பருக்குள், ஜம்மு - காஷ்மீர் சட்டசபைக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
இந்நிலையில், ஜம்மு - காஷ்மீர் துணை நிலை கவர்னருக்கான நிர்வாக அதிகாரத்தை மேலும் விரிவுபடுத்தும் நோக்கத்துடன், ஜம்மு - காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்த திருத்திய விதிகளுக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, இது நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வருவதாக அரசாணை குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த திருத்தங்களின்படி, போலீஸ், பொது ஒழுங்கு, ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட பணியிடங்கள் தொடர்புடைய விவகாரங்கள், ஊழல் தடுப்பு அமைப்பு போன்ற நிதித் துறையின் முன் அனுமதி பெற வேண்டிய அனைத்து விஷயங்களிலும், துணை நிலை கவர்னரின் முன் ஒப்புதலை பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அட்வகேட் ஜெனரல் மற்றும் பிற சட்ட அதிகாரிகள் நியமனத்துக்கான முன்மொழிவை, துணை நிலை கவர்னரிடம் அளித்து ஒப்புதல் பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதுபோல, வழக்குகள் தொடர்வதற்கான அனுமதி அல்லது மறுப்பது அல்லது மேல்முறையீடு செய்வது தொடர்பான எந்த நடவடிக்கைக்கும் துணை நிலை கவர்னரின் ஒப்புதல் தேவை.
சிறைச்சாலைகள், வழக்கு விசாரணை அமைப்புகள், தடய அறிவியல் ஆய்வகம் ஆகியவை தொடர்புடைய அனைத்துக்கும், கவர்னரின் முன் அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட அனைத்திந்திய சேவை அதிகாரிகள் நியமனம் உள்ளிட்ட விவகாரங்களிலும், துணை நிலை கவர்னரின் முன் அனுமதி பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.