அரிய வகை செவித்திறன் குறைபாடு: பாடகி அல்கா யாக்னிக் பாதிப்பு
அரிய வகை செவித்திறன் குறைபாடு: பாடகி அல்கா யாக்னிக் பாதிப்பு
அரிய வகை செவித்திறன் குறைபாடு: பாடகி அல்கா யாக்னிக் பாதிப்பு
ADDED : ஜூன் 19, 2024 03:30 AM

மும்பை: அரிய வகை செவித்திறன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு உள்ளதாக, பிரபல பாலிவுட் பின்னணி பாடகி அல்கா யாக்னிக் தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில், பிரபல பாலிவுட் பின்னணி பாடகி அல்கா யாக்னிக், 58, வசித்து வருகிறார். தமிழ், ஹிந்தி உட்பட பல்வேறு மொழிகளில், 2000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள இவர், இரு தேசிய விருதுகளை பெற்றுள்ளார். 'ஏக் தோ தீன், குச் குச் ஹோதா ஹை மற்றும் கலி மே ஆஜ் சந்த் நிக்லா' போன்ற பிரபலமான பாடல்களை, பாடகி அல்கா யாக்னிக் பாடியுள்ளார்.
இந்நிலையில், தனக்கு அரிய வகை செவித்திறன் பாதிப்பு இருப்பதாக, சமூக வலைதளத்தில் பாடகி அல்கா யாக்னிக் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட பதிவு: நான் சில வாரங்களுக்கு முன், விமானத்தில் இருந்து வெளியேறும் போது திடீரென என்னால் எதையுமே கேட்க முடியவில்லை.
எனக்கு வைரஸ் தாக்குதலால் செவிகளில் மிகவும் அரிதான உணர்திறன் நரம்பு பாதிப்பு ஏற்பட்டு, கேட்கும் திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது அதற்கான சிகிச்சை எடுத்து வருகிறேன்.
எனக்காக நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் பிரார்த்தித்துக் கொள்ளுங்கள். உங்களுடைய ஹெட்போன்களில், பாடல்களை மிக சத்தமாக வைத்து கேட்பதை தவிர்த்து எச்சரிக்கையுடன் இருங்கள். உங்கள் அனைவரின் அன்புடன் நான் மீண்டு வருவேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து டாக்டர்கள் கூறுகையில், 'பாடகி அல்கா யாக்னிக் பாதிக்கப்பட்டிருப்பது மிகவும் அரிய வகை நோய். இந்த நோய், லட்சத்தில் 5 முதல் 20 நபர்களுக்கு ஏற்படுகிறது. 'அதிகளவு சத்தத்தை கேட்பது, நோய்த்தொற்று பாதிப்பு, தலையில் அடிபடுதல், வயோதிகம் போன்றவற்றால் இந்த அரிய வகை செவி உணர்திறன் நரம்பு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது' என்றனர்.