3000 கி.மீ., துாரத்துக்கு 'கவச்': ரயில்வே அமைச்சகம் அறிக்கை
3000 கி.மீ., துாரத்துக்கு 'கவச்': ரயில்வே அமைச்சகம் அறிக்கை
3000 கி.மீ., துாரத்துக்கு 'கவச்': ரயில்வே அமைச்சகம் அறிக்கை
ADDED : ஜூன் 19, 2024 03:34 AM

புதுடில்லி: நாடு முழுதும், 3000 கி.மீ., தொலைவிலான ரயில் தடங்களில், 'கவச்' தொழில்நுட்பம் அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருவதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் நேற்று முன்தினம் நடந்த ரயில் விபத்தை தொடர்ந்து, ரயில் பயணிகளின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையே, ரயில்வே துறையின் ஆர்.டி.எஸ்.ஓ., எனப்படும், ஆராய்ச்சி வடிவமைப்புகள் மற்றும் தரநிலைகள் அமைப்பு, 'கவச்' என்ற தொழில்நுட்பத்தை 2019ல் உருவாக்கியது.
ரயில் ஓட்டுனர்கள் அவசர காலத்தில் ரயிலை நிறுத்தாமல் போனால், எதிர்வரும் ஆபத்தை உணர்ந்து ரயில் தானாகவே நிற்கும்படியான தொழில்நுட்பத்தை, 'கவச்' அளிக்கிறது. இந்த தொழில்நுட்பத்தை செயல்படுத்தும் பணிகள் நாடு முழுதும் நடந்து வருகிறது.
இது குறித்து ரயில்வே அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
'கவச்' தொழில்நுட்பத்துக்கு 2019ல் சான்று அளிக்கப்பட்டது. அதன் பின் கொரோனா பரவல் காரணமாக பணியில் சுணக்கம் ஏற்பட்டது.
தற்போதைய நிலவரப்படி, 1465 கி.மீ., துார வழித்தடங்கள், 121 ரயில்களில் இந்த தொழில்நுட்பம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 3000 கி.மீ., துாரத்திற்கு கவச் தொழில்நுட்பத்தை அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.
ரயில் தடங்களில் கண்ணாடி வட கம்பிகள், தொலை தொடர்பு கருவிகள் மற்றும் கோபுரங்கள் அமைப்பது, ரயில்வே ஸ்டேஷன்களில் தரவு மையங்கள் அமைப்பது, இறுதியில் ரயில்களில் கருவிளை நிர்மாணிப்பது உட்பட பல்வேறு பணிகள் தொடர்புடையதால் நீண்ட கால அவகாசம் ஆகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ரயில்வே பாதுகாப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்ட பணியாளர்களின் எண்ணிக்கை 10 லட்சமாக இருக்கும் நிலையில், அதில் 1.5 லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்தின் மீது ரயில்வே அமைச்சகம் பதில் அளித்துள்ளது.