குஜராத்தில் சண்டிபுரா தொற்று 4 வயது சிறுமி உயிரிழப்பு
குஜராத்தில் சண்டிபுரா தொற்று 4 வயது சிறுமி உயிரிழப்பு
குஜராத்தில் சண்டிபுரா தொற்று 4 வயது சிறுமி உயிரிழப்பு
ADDED : ஜூலை 18, 2024 11:43 PM
ஆமதாபாத்: குஜராத்தில் 4 வயது பெண் குழந்தை சண்டிபுரா தொற்றுக்கு உயிரிழந்தது கண்டறியப்பட்டுள்ளது.
ஈ, கொசு மற்றும் உண்ணிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் ஒரு வகை தொற்று சண்டிபுரா தொற்று என்றழைக்கப்படுகிறது.
மஹாராஷ்டிராவின் சண்டிபுரா என்ற கிராமத்தில் 1965ல் முதல்முறையாக இந்த தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து, இந்த பெயரால் அழைக்கப்படுகிறது.
திடீரென ஏற்படும் கடுமையான காய்ச்சல், கடும் தலைவலி, வாந்தி, வலிப்பு, மனக்குழப்பம் உள்ளிட்டவை அறிகுறிகளாக கூறப்படுகின்றன.
தொற்று தீவிரமடைந்தால் மூளையில் வீக்கம் ஏற்பட்டு கோமா நிலைக்கு கொண்டு செல்லும் அபாயம் உள்ளது. முறையான சிகிச்சை அளிக்காவிட்டால் உயிர் பறிக்கும் அபாயமும் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
குஜராத்தின் ஆரவல்லி மாவட்டம், மோட்டா கந்தாரியா என்ற கிராமத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமிக்கு காய்ச்சல் ஏற்பட்டது. சபர்கந்தா மாவட்டத்தின் ஹிம்மத் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது ரத்த மாதிரிகளை சோதித்தபோது, அவர் சண்டிபுரா தொற்றால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
சபர்கந்தா, ஆரவல்லி, ராஜ்கோட், ஆமதாபாத் உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 14 பேர் சண்டிபுரா தொற்றுக்கு உயிரிழந்து இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதே அறிகுறிகளுடன் 29 பேருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சபர்கந்தா மாவட்ட சுகாதார அதிகாரி தெரிவித்தார்.