உ.பி.,யில் கனமழை 24 மணி நேரத்தில் 54 பேர் உயிரிழப்பு
உ.பி.,யில் கனமழை 24 மணி நேரத்தில் 54 பேர் உயிரிழப்பு
உ.பி.,யில் கனமழை 24 மணி நேரத்தில் 54 பேர் உயிரிழப்பு
ADDED : ஜூலை 13, 2024 01:06 AM
லக்னோ:உத்தர பிரதேசத்தில், மின்னல் தாக்குதல், பாம்பு கடி மற்றும் நீரில் மூழ்கி என, 24 மணி நேரத்தில், 54 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து, உ.பி., மாநில நிவாரண ஆணையர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
உத்தர பிரதேசத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கடந்த 10ம் தேதி இரவு 7:00 மணி முதல் நேற்று முன் தினம் இரவு 7:00 மணி வரை சுல்தான்பூரில் 7, சந்தோலியில் 6 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்தனர்.
அதேபோல, பிரயாக்ராஜ் மற்றும் பதேபூரில் தலா 4 பேர், ஹமிர்பூரில் இருவர் மின்னல் தாக்கி பலியாகினர். உன்னாவ், அமேதி, எட்டாவா, சோன்பத்ரா, பதேபூர் மற்றும் பிரதாப்கர் மாவட்டங்களில் தலா ஒருவரும் மின்னல் தாக்கி உயிரிழந்தனர்.
மேலும், வெள்ளத்தில் மூழ்க ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். அமேதி மற்றும் சோன்பத்ராவில் தலா ஒருவர் பாம்பு கடித்து மரணம் அடைந்தனர்.
மின்னல் தாக்குதல் பாம்பு கடி மற்றும் வெள்ளத்தில் மூழ்கி 24 மணி நேரத்தில் 54 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணிகளும், நிவாரணப் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் வசிப்போர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அவசர கால உதவி மையம் 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.