கெஜ்ரிவால் உதவியாளரின் ஜாமின் மனு தள்ளுபடி
கெஜ்ரிவால் உதவியாளரின் ஜாமின் மனு தள்ளுபடி
கெஜ்ரிவால் உதவியாளரின் ஜாமின் மனு தள்ளுபடி
ADDED : ஜூலை 13, 2024 01:06 AM

புதுடில்லி:ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்.பி., ஸ்வாதி மாலிவாலை தாக்கியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உதவியாளர் பிபவ் குமார் தாக்கல் செய்த ஜாமின் மனுவை உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உதவியாளராக இருப்பவர் பிபப் குமார். ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்.பி. ஸ்வாதி மாலிவால் மே 13ம் தேதி முதல்வர் பங்களாவுக்கு வந்தார். அப்போது, பிபப் குமார், ஸ்வாதியை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, ஸ்வாதி கொடுத்த புகார்படி வழக்குப் பதிவு செய்த போலீசார், பிபப் குமாரை மே 18ல் கைது செய்தனர்.
திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குமார், டில்லி உயர் நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்தார். அதை நேற்று விசாரித்த நீதிபதி அனுாப் குமார் மென்டிரட்டா, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் விசாரணை நடந்து வருவதாகவும், வரும் 16ம் தேதியோ அதற்கு முன்போ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.