விஷமிகள் வீசிய ரசாயன பொடி; 4 பள்ளி மாணவியர் 'அட்மிட்'
விஷமிகள் வீசிய ரசாயன பொடி; 4 பள்ளி மாணவியர் 'அட்மிட்'
விஷமிகள் வீசிய ரசாயன பொடி; 4 பள்ளி மாணவியர் 'அட்மிட்'
ADDED : மார் 15, 2025 01:37 AM

கதக்: கர்நாடகாவில், ரசாயனம் கலந்த வண்ணப் பொடியை வீசியதால், நான்கு பள்ளி மாணவியர் உடல்நிலை பாதிக்கப்பட்டது.
கர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தின் சுவர்ணகிரி தாண்டா கிராமத்தில் வசிக்கும் மாணவியர், வழக்கம் போல் நேற்று காலை பஸ்சில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது சில இளைஞர்கள், ஹோலி பண்டிகையையொட்டி மாணவியர் மீது வண்ணப் பொடியை வீச முற்பட்டனர்.
மாணவியர், 'எங்களுக்கு தேர்வு உள்ளது. வண்ணப் பொடி வீசாதீர்கள். நாங்கள் பள்ளிக்குச் செல்ல வேண்டும்' என, கெஞ்சினர்.
அதை பொருட்படுத்தாமல், வண்ணப் பொடியை அந்த இளைஞர்கள் வீசினர். அதில் பல ரசாயனங்கள் கலந்திருந்ததால் நான்கு மாணவியருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
பஸ்சில் இருந்து கீழே இறங்கியதும், வாந்தியெடுக்க துவங்கினர். பின், மயக்கம் அடைந்தனர். இதை கவனித்த அப்பகுதியினர், மாணவியரை அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதில், இரண்டு மாணவியர் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், கதக்கில் உள்ள ஜிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். மாணவியரின் நிலைக்கு காரணமான இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, குடும்பத்தினர், கிராமத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.
தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். மாணவியர் மீது வண்ணப் பொடியை வீசியவர்களை தேடி வருகின்றனர்.