326 சிறுமியர் கர்ப்பம் அமைச்சர் ஊரில் அதிர்ச்சி
326 சிறுமியர் கர்ப்பம் அமைச்சர் ஊரில் அதிர்ச்சி
326 சிறுமியர் கர்ப்பம் அமைச்சர் ஊரில் அதிர்ச்சி
ADDED : ஜூலை 08, 2024 06:39 AM

துமகூரு: உள்துறை அமைச்சர் பரமேஸ்வரின் சொந்த ஊரான துமகூரில், ஓராண்டில் 326 சிறுமியர் கர்ப்பம் அடைந்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகாவின் வட மாவட்டமான ராய்ச்சூரில், குழந்தை திருமணங்கள் சர்வ சாதாரணமாக நடக்கும். இதை தடுக்க பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஓராண்டில் சிறுமியர் கர்ப்பம் குறித்து, கர்நாடக பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை ஒரு ஆய்வு நடத்தியது.
இந்த ஆய்வில் துமகூரு மாவட்டத்தில் மட்டும் 326 சிறுமியர் கர்ப்பம் ஆனது தெரிந்தது.
குழந்தை திருமணங்கள், திருமணத்திற்கு முந்தைய உடலுறவு, பலாத்காரம் உள்ளிட்டவைகளால் கர்ப்பம் அடைந்தது தெரியாமலேயே, கர்ப்பம் அடைந்தது தெரிய வந்துள்ளது.
கர்நாடகாவில் குழந்தை திருமணங்கள் நடப்பதை தடுக்க, பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அதிகாரிகள் பள்ளிகளுக்கு நேரில் சென்றும், பெற்றோர்களை சந்தித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இப்படி இருக்கும் சூழ்நிலையில் குழந்தை திருமணங்களாலும் சிறுமியர் கர்ப்பமாகி இருப்பது அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இத்தனைக்கும் துமகூரு உள்துறை அமைச்சர் பரமேஸ்வரின் சொந்த ஊராகும். சொந்த ஊரிலேயே குழந்தை திருமணங்களை தடுக்க முடியாத நிலைக்கு, பரமேஸ்வர் தள்ளப்பட்டுள்ளார்.
இப்பிரச்னை குறித்து, பெங்களூரு கே.ஜி., அரசு பொது மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் இந்திரா கூறுகையில், ''சிறுமியர் கர்ப்பம் ஆவது, அவர்களது உடல் ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். சிறுமி குழந்தை பெற்றெடுத்தால் ரத்தசோகை, உயர் ரத்த அழுத்தம் ஏற்படும்.
''உடல் ஊனமுற்ற குழந்தைகள் பிறக்கவும் வாய்ப்புள்ளது. சிறுமியர் கர்ப்பம் தரிப்பது சமூக பிரச்னையாக மாறி விட்டது. இதை தடுக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.