பங்கு சந்தையில் 31 லட்சம் கோடி ரூபாய் போச்சு!
பங்கு சந்தையில் 31 லட்சம் கோடி ரூபாய் போச்சு!
பங்கு சந்தையில் 31 லட்சம் கோடி ரூபாய் போச்சு!
ADDED : ஜூன் 05, 2024 03:23 AM

சென்னை : கடந்த 2020 மார்ச் மாதத்தில், கொரோனா பரவலால், பங்குச் சந்தை மிகப்பெரிய சரிவைக் கண்டது. அதன் பின், நான்கு ஆண்டுகள் கழித்து, ஒரு நாளில் அதிகபட்ச இழப்பை நேற்று முதலீட்டாளர்கள் சந்தித்துள்ளனர்.
தேர்தல் முடிவுக்கு முந்தைய கணிப்புகளின் அடிப்படையில், திங்கள் அன்று பங்குச் சந்தை கிட்டத்தட்ட மூன்று சதவீதம் அளவுக்கு ஏற்றம் கண்டது.
அன்று முதலீட்டாளர்கள் அதிக லாபம் ஈட்டியதை தொடர்ந்து, மறுநாள், தேர்தல் முடிவுகளை எதிர்நோக்கி உற்சாகத்துடன் காத்திருந்தனர். கணிப்புகளின்படியே, ஆளும் கூட்டணி கட்சி மெகா வெற்றியை பெறும்; சந்தை ஏற்றம் காணும் என எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால், தேர்தல் முடிவுகள் எதிர்பார்ப்புக்கு மாறாக இருந்ததை அடுத்து, சந்தையில் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டது.
வர்த்தகத்தின் இடையே, மும்பை குறியீட்டு எண் 'சென்செக்ஸ்' கிட்டத்தட்ட 6,000 புள்ளிகள் சரிவைத் தொட்டு, முதலீட்டாளர்களை பதற வைத்தது. வர்த்தகத்தின் முடிவில், நிப்டி, சென்செக்ஸ் குறியீடுகள், கிட்டத்தட்ட 6 சதவீத சரிவை கண்டன.
மும்பை பங்குச் சந்தையில், நேற்று ஒரு நாளில் மட்டும், முதலீட்டாளர்கள் கிட்டத்தட்ட 31 லட்சம் கோடி ரூபாயை இழந்தனர்.
நேற்றைய வர்த்தகத்தில், அதிகபட்சமாக 'அதானி போர்ட்ஸ்' நிறுவனம் 21.40 சதவீத சந்தித்தது. இதையடுத்து, 'அதானி எண்டர்பிரைசஸ்' 19.07 சதவீத இழப்பை சந்தித்தது. மேலும் பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள் பலவும் கடும் சரிவைக் கண்டன.
தேர்தல் முடிவுகள் பா.ஜ.,வுக்கு பெரும்பான்மை இடங்களை தராததால், இதுவரை மேற்கொண்ட கொள்கைகளில் இனி மாற்றங்கள் இருக்கக்கூடும் என முதலீட்டாளர்கள் கருதினர்.
பா.ஜ., அரசே தொடர்ந்து அமையும் என்றாலும், கூட்டணி கட்சிகளின் தயவுடனேயே ஆட்சியை நடத்த வேண்டியதிருக்கும் என்பதால், முன்போல் வலுவாக பொருளாதாரம் சார்ந்த முடிவுகளை எடுக்க முடியுமா என்ற சந்தேகமும் முதலீட்டாளர்களிடம் எழுந்துள்ளது.
குறிப்பாக, முழுக்க சமூக பொருளாதார சீர்திருத்தங்களின் பக்கமாக பா.ஜ.,வின் பார்வை திரும்பிவிடக்கூடும் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
ஆனால், தொழில்நுட்பத் துறையின் வேகமான வளர்ச்சி, சீனாவுக்கு மாற்றாக இருப்பது போன்ற காரணங்களில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் எதிர்வரும் காலத்திலும் தடை எதுவும் இருக்காது என, பல பங்குச் சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கூடவே, சந்தையில் உள்நாட்டு முதலீட்டாளர்களின் பங்களிப்பும் அதிகரித்துள்ளது.
இவை அனைத்தும் சந்தையின் தொடர் வளர்ச்சிக்கு உதவுவதாகவே இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். அத்துடன், ஏற்கனவே தேர்தல் முடிவுகளுக்கு சந்தை தன்னுடைய எதிர்வினையை காண்பித்து விட்டது.
இனிவரும் நாட்களில் சிறு சிறு ஏற்ற, இறக்கங்கள் இருந்தாலும், சந்தையின் மேல்நோக்கிய பயணம் தொடரும் என்றும் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.